2010-09-10 15:49:40

செப்டம்பர் 11. நாளும் ஒரு நல்லெண்ணம்


உலகத்திலேயே அதிகமாக, அதுவும் இலவசமாகக் கிடைக்கக்கூடியது எதுவாக இருக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். அது நமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள்.

அதையே இன்று கன்ஸல்டேஷன் என்று ஆங்கில வார்த்தையில் அழகாகக் கூறி வணிக மயமாக்கிவிட்டார்கள். எதற்கும் இன்று கன்ஸல்டேஷன், அதாவது பணம் கொடுத்து ஆலோசனை பெறும் வழிகள் உள்ளன.

அலோசனைகள் என்பது ஒருபக்கம் வலுவற்றதாய் இருக்கின்றது, மறுபக்கமோ வியாபார நோக்கமுடையதாக மாறிவிட்டது.

ஆலோசனைக் கூறுவது என்பது மிகமிக எளிதான ஒரு விடயமாக இருக்கின்றது.

யாரும் கூறலாம். ஆனால் வழிகாட்டுதல் என்பதை எல்லோராலும் செய்துவிட முடியாது. அதற்கான முன் அனுபவங்கள் இருக்கவேண்டும் ஏனெனில் வழிகாட்டுதல் என்பது வாழ்ந்துகாட்டுதலை உள்ளடக்கியது. நாம் சொல்ல வருவது என்னவென்றால், இந்த பக்கமாகப் போனால் மூன்றாவதுத் தெரு வரும் என்பது வழிகாட்டுதல் அல்ல. பிறர் வாழ்வதற்காக நாம் வாழ்ந்து வழி காட்டுதல்.

கூட்டுக்குடும்பமாய் இருந்தபோது சிறு சிறுப் பிரச்சனைகள் வந்தபோது பெரியோரின் ஆலோசனைகள் அறிவுரைகள் இருந்தன; வழிகாட்டுதல்கள் இருந்தன; அவர்கள் நம் முன் வாழ்ந்து வென்ற விதம் பாடமாக இருந்தது. இன்று எல்லாவற்றிற்கும், முன் பின் தெரியாத மனநல வல்லுனர்களிடம் சென்று பணம் கட்டி ஆலோசனைக் கேட்க வேண்டியுள்ளது.

இப்படியொரு இடைவெளி எப்படித் தோன்றியது, ஏன் தோன்றியது, என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

வழிகாட்டுவோர் இன்று அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள்.

ஆகவே, வழிகாட்டுதல் என்பதன் உண்மையான அர்த்தம் வாழ்ந்துகாட்டுதல் என்பது உணரப்படவேண்டும்.

நாம் நன்முறையில் வாழ்ந்து காட்டினால், அதுவே வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வழிகாட்டலாக, பாடமாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.