2010-09-08 16:22:37

செப்டம்பர் 09 – நாளும் ஒரு நல்லெண்ணம்


இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குதல் வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். நல்லவை எல்லாம் இருக்கும் நிலை வேண்டும். இவையெல்லாம் இன்றைய உலகில் இயலக்கூடியதா என்று கேட்டால், வெறும் கனவாகத்தான் இருக்கமுடியும் என உறுதியிட்டு கூற முடிகிறது. இத்தகைய அவநம்பிக்கைகள் பரவிக்கிடக்கக் காரணம் தான் என்ன? மீட்டெடுக்க முடியாத ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோமா? மாற்றம் காண முடியும் என இறங்கியவர்கள் எல்லாருமே தங்கள் கால்களை அசுத்தம் பண்ணியது மட்டும் தான் நாம் அண்மைக்காலங்களில் கண்ட உண்மை நிலையா?

நீ உன் வேலையைப் பார்த்துவிட்டு போயேன் என்ற வாழ்த்துக்கள் வீட்டிற்குள்ளும் வெளியிடங்களிலும் அடிக்கடி கேட்கக் கூடிய ஒன்றாய் மாறிவிட்டது எப்படி?

மற்றவர்கள் பற்றி அதிக அக்கறை காட்டினால், நீ உன் நிம்மதியை இழந்துவிடுவாய் என்று இன்றைய இளையத் தலைமுறையினருக்குத் தங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டும் மனிதர்கள் உண்மையிலேயே சுயநலவாதிகளா? நடைமுறைவாதிகளா?

உலகம் இப்படியே போனால், வலிமையுள்ளவன் மட்டுமே வாழமுடியும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

இந்த உலகில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய தேவை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

எந்த இடத்திலிருந்து இதனைத் துவக்கப் போகிறோம் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னால் நிற்கும் கேள்வி.








All the contents on this site are copyrighted ©.