2010-09-07 15:35:37

விவிலியத் தேடல்


RealAudioMP3
செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாள் என்று கடைபிடிக்கிறோம். எழுத்தறிவு அனைவருக்கும் தரப்படுவது நல்லது என்பதை உணர்த்துவதற்கு இந்த நாள் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏன் எழுத்தறிவு வேண்டும் என்பதை ஆராயும் போது, ஒரு கசப்பான உண்மை வெளி வருகிறது. படித்தவர்கள், கல்வி அறிவு பெற்றவர்கள் என்று தங்களையே அழைத்துக் கொள்பவர்கள் எழுத்தறிவற்றவர்களை ஏமாற்றி வருவதுதான் அந்தக் கசப்பான உண்மை. அறிவுபடைத்தவர்கள் என்ற முகமூடி அணிந்த இந்தக் ஓநாய்களின் தாக்குதல்களிலிருந்து எழுத்தறிவற்ற இந்த எளியவர்கள், இந்த ஆடுகள் தங்களையே காத்துக் கொள்வதற்கு அவர்கள் எழுத்தறிவு பெற வேண்டியுள்ளது.
எழுத்தறிவு பெறாத இந்த மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களைக் காட்டிலும் இன்னும் பல வழிகளில் ஆழ்ந்த, பரந்த அறிவும் திறமைகளும் கொண்டவர்கள் என்பதையும் இந்த உலக எழுத்தறிவு நாள் நமக்கு நினைவு படுத்த வேண்டும். எழுத்தறிவு இல்லாமல், அதே நேரம், பல வழிகளில் உலகிற்கு அறிவூட்டும் இந்தப் பெரியோரை மரியாதையுடன் வணங்குகிறோம். எழுத்தறிவு நாளையும், திருப்பாடல் 23ன் வழியாக நாம் சிந்தித்து வரும் ஆயனையும் இன்றைய விவிலிய சிந்தனையில் இணைத்துப் பார்க்க முயல்வோம்.

"நீ ஒழுங்காப் படிக்கலன்னா, ஆடு மாடு மேய்க்கத் தான் போகணும்." என்பது அடிக்கடி நாம் பயன்படுத்தும், அல்லது கேள்விப்படும் ஓர் எச்சரிக்கை. இதை எச்சரிக்கை என்று சொல்வதை விட, ஒரு வாழ்த்து, ஆசீர்வாதம் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆடு, மாடு மேய்ப்பதற்கு அதிக அறிவு தேவையில்லை என்ற கருத்தில் சொல்லப்படும் இந்த எச்சரிக்கை படித்தவர்களிடம் இருந்து வந்திருக்கும் எச்சரிக்கை.
சிறு வயதில் என்னிடம் இப்படி யாரும் சொல்லியிருந்தால், ஒரு வேளை பயந்து போய் படித்திருப்பேன். ஆனால், இன்று என்னிடம் "ஆடு மாடு மேய்ப்பதற்குத் தான் எனக்குத் தகுதி உள்ளது" என்று சொன்னால், அதை ஒரு பெரும் புகழாக எண்ணி மகிழ்வேன். அதுவும் திருப்பாடல் 23ன் வரிகளைச் சிந்திக்கும் இந்த வேளையில் என்னை ஒருவர் ஆயனாக எண்ணிப் பார்ப்பதை பெரும் பாராட்டாக நினைத்துக் கொள்வேன்.
ஆடு மாடுகளை மேய்த்த அனுபவம் ஒரு நாள் கூட எனக்குக் கிடையாது. ஆகவே, இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்கள் எல்லாமே நான் படித்தறிந்த, சிந்தித்த எண்ணங்கள்.

"படிக்கலன்னா, ஆடு மாடு மேய்க்கத் தான் போகணும்." என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த மேய்க்கும் தொழிலில் உள்ள நுணுக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆடுகளை மேய்ப்பதற்கும், மாடுகளை மேய்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ஓர் அடிப்படை வேறுபாடு என்ன தெரியுமா? மாடுகளை மேய்ப்பவர் அவைகளின் பின்னே நின்று விரட்ட வேண்டும். ஆடுகளை மேய்ப்பவர் அவைகளின் முன் சென்று நடத்த வேண்டும். ஆடுகளிலேயே, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என்று இருவகை உண்டு. இவைகளை மேய்ப்பது வேறுபாடுகள் இருக்கலாம்... சரிவரத் தெரியவில்லை. மொத்தத்தில், ஆடு, மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்பது மட்டும் எனக்கு நன்கு தெளிவாகிறது. (இனியாகிலும் யாரையாவது இகழ்வாகப் பேச நினைக்கும் போது, ஆடு மாடு மேய்ப்பது பற்றி பேச வேண்டாம். நமது திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போல், 'படிப்பு வரவில்லை என்றால், அரசியலுக்குப் போய்விடு' என்ற பாணியில் பேசுவோம்.)

"ஜிம்மி, உட்கார்." என்று சொன்னால், பழக்கப்பட்ட ஒரு நாய் உட்கார்ந்து விடும். பரபரப்பான, சப்தங்கள் நிறைந்த சூழல்களிலும் ஒரு நாயை உட்கார வைத்து விடலாம். ஆனால், ஆடுகளை அவ்வளவு எளிதில் அமர்த்திவிட முடியாது. சிறு, சிறு சப்தங்கள், அதிர்ச்சிகள் போதும்... ஆடுகள் சிதறுண்டு ஓடுவதற்கு. அவை ஓரிடத்தில் அமைதியாக அமர வேண்டுமெனில், அந்த இடத்திலிருந்து பயம் தரக்கூடிய, எல்லாமே அகற்றப்பட்டிருக்க வேண்டும். அதிர்ச்சிகள், பயங்கள் இல்லாத சூழலை உருவாக்குவது ஆடுகள் மேய்ப்பவரின், ஆயனின் தனிக் கலை.
"பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்." என்று தாவீது கூறும் இந்த வரியில் அழகான ஒரு காட்சி மனக்கண் முன் விரிகிறது. அதிர்ச்சிகள், அலைக்கழிப்பு, ஓலங்கள் என்று எதுவும் இல்லாத ஒரு அமைதியான, மனதுக்கு இதமானச் சூழலில், உண்ட மயக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆடுகளை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இந்த ஒரு நிலையில் ஆடுகளை இளைப்பாறச் செய்த அந்த ஆயன் உண்மையிலேயே திறமை மிக்கவர்தான். ஒரு வேளை, எழுத்தறிவற்றவராய் இருக்கலாம். ஆனால் இன்னும் பல வழிகளில் அறிவுத் திறனும், பொது அறிவும் அதிகம் உள்ளவர் இந்த ஆயன்.

பசும்புல் வெளியைப் பற்றி சிந்தித்தோம். இளைப்பாறுவது பற்றி இன்று சிந்திப்போம். இளைப்பாறுதலை ஒரு பரிசாகவும், கலையாகவும் பார்க்க வேண்டும். கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்து வரும் வயது முதிர்ந்தவர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது: "உங்கள் தினசரி வாழ்வில் எந்த நேரம் உங்களுக்கு மிகவும் பிடித்த நேரம்?" இதுதான் கேள்வி. அவர்களில் அதிகம் பேர் சொன்ன பதில் இதுதான்: "காலையில் வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்கு, அல்லது பள்ளிக்குச் சென்ற பிறகு, வீட்டில் உருவாகும் அமைதியான அந்த நேரம் எனக்கு மிகவும் பிடிக்கும்." பல இல்லங்களில் வீட்டுத் தலைவிகளும் இப்படிச் சொல்ல வாய்ப்புண்டு. சூழ்நிலைகளிலிருந்து வரும் இவ்வகை இளைப்பாறுதல் நமக்குக் கிடைக்கும் ஒரு பரிசு.
தினசரி வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பெரும் இளைப்பாறுதல் இரவு தூக்கம். பயங்கள், கவலைகள், மனக்கசப்புகள், ஏக்கங்கள் இன்றி எத்தனை இரவுகள் இளைப்பாறச் செல்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி இளைப்பாறச் செல்வதற்கு நமது குடும்பச் சூழல், அலுவலகச் சூழல் இவை ஒத்துழைக்க வேண்டும். ஆனால் இந்தச் சூழ்நிலைகள் ஒத்துழைப்பது இல்லையே. சூழ்நிலைகள் சரிவர அமையவில்லை என்றாலும், இளைப்பாறும் வழிகளை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இது ஒரு கலை. இந்தக் கலையை நாம் பல வழிகளில் வளர்த்துக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள், சிறு செபங்கள், நமக்கு நாமே ஊட்டிக் கொள்ளும் எண்ணங்கள் இவைகள் வழியே நாம் இளைப்பாறுதலைப் பெற முடியும். இளைப்பாறுதல் நம்மை வந்தடையும் ஒரு பரிசு. அல்லது, நாமாகவே வளர்த்துக் கொள்ளும் ஒரு கலை.

கவலை தாங்கும் மரம் என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. உழைப்பாளி ஒருவர் தினமும் வேலையிலிருந்து வீடு திரும்பும் போது, தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு வருவார். வீட்டுக்குள் நுழையும் முன் அந்தப் பையை அவர் வீட்டின் முன் இருக்கும் ஒரு மரத்தின் கிளை ஒன்றில் மாட்டி விட்டு வீட்டுக்குள் செல்வார். மறு நாள் காலை வேலைக்குச் செல்லும் போது, அந்தப் பையை எடுத்து மாட்டிக் கொண்டு வேலைக்குச் செல்வார். ஒவ்வொரு நாளும் நடந்த இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் நண்பர், "அந்தப் பையில் என்ன இருக்கிறது? அதை ஏன் தினமும் வெளியில் மாட்டி விட்டு வீட்டுக்குள் செல்கிறீர்?" என்று கேட்டார். உழைப்பாளி அவரிடம் அந்தப் பையைத் திறந்து காட்டினார். அதனுள் ஒன்றும் இல்லை. நண்பர் வியப்போடு அவரைப் பார்த்தார். உழைப்பாளி தன் நண்பரிடம், "என் அலுவலகத்தில் தினமும் பிரச்சனைகள் எழும். அந்தக் கவலைகளை நான் வீட்டுக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என்று வெளியிலேயே மாட்டி விட்டுப் போகிறேன்." என்றார். நம்மை வந்தடையும் கவலைகளை, பிரச்சனைகளை சமாளிக்க பல வழிகள் உண்டு என்பதை வலியுறுத்தும் பல நூறு கதைகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட அல்லது குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் பிரச்சனைகள், சிக்கல்கள் இல்லாத நாட்கள் அபூர்வம். அந்தப் பிரச்சனைகளை, முக்கியமாக பணி இடங்களில் உண்டாகும் பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு வருவதனால், நமது இளைப்பாறுதல் மட்டுமல்லாமல் வீட்டிலுள்ள அனைவரின் இளைப்பாறுதலையும் கெடுப்பது நல்லதல்ல. ஒவ்வொருவரும் கவலை தாங்கும் மரம் ஒன்றை வீட்டுக்கு முன் நட முடியவில்லை என்றாலும், வாழ்வின் ஓர் ஓரத்தில் நட்டு வைத்து, அவைகளில் கவலைகளை மாட்டி விடும் பழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது. அப்படி ஒரு கவலை தாங்கும் மரத்தை நம் வாழ்வில் காணும் நல்லாயன், அந்த மரத்தையும் அதில் நாம் மாட்டியிருக்கும் கவலைகளையும் வேரோடு வெட்டி எறிந்து, பசும்புல் வெளிகளை உருவாக்கி, நம்மை அதில் இளைப்பாறச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தத் திருப்பாடலை வேண்டுவோம்.

தனிப்பட்ட, மற்றும் குடும்பச் சூழல்களில் இளைப்பாறுதலைப் பற்றி பேசும் நாம், இறுதியாக இந்த இளைப்பாறுதலை உலக அளவிலும் சிந்திப்போம். அடிமைகளாக, நாடு விட்டு நாடு துரத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, வந்த யூத குலத்தில் பிறந்து வளர்ந்த தாவீது, இந்த வரிகளில் தீட்டியுள்ள அந்தக் கற்பனை தன் குலத்திற்கு அவர் தந்த ஓர் அழகான பரிசு. ஆனால், அவருடைய காலத்திற்கு முன்னும், அவர் காலத்திற்கு பின்னும் தாவீதின் கற்பனையில் காட்டிய அந்த இளைப்பாற்றியை யூதர்கள் பெறமுடியாமல் போனது ஒரு வரலாற்றுக் கொடுமை. யூதருக்கு எதிரான கொடூரங்கள் என்று எண்ணும் போது, ஹிட்லரின் பயங்கரச் செயல்பாடுகள், இன்றும் இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் பயங்கரங்கள் மனதில் பாரமாய் அழுத்துகின்றன. வாஷிங்டனில் இம்மாதம் முதல் தேதி இவ்விரு நாடுகளின் தலைவர்கள் மீண்டும் ஒரு சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். தீர்வுகள் இல்லாமல் தொடர் கதையாக, தொடர் நரகமாக இருக்கும் இந்தப் பிரச்சனையை நல்லாயன் தீர்த்து வைக்க வேண்டுவோம்.

இளைப்பாற முடியாமல் தவிப்பது யூத குலம் மட்டுமல்ல, அன்பர்களே. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இனம், மொழி, நிறம், மதம் என பலவற்றின் அடிப்படையில் எத்தனையோ கோடான கோடி மக்கள் இளைப்பாறுதல் இழந்து தவிக்கின்றனர். இந்திய மண்ணிலும், அதைச் சுற்றியுள்ள இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், பங்களாதேஷ் என்று எல்லா நாடுகளிலும் இளைப்பாறுதல் வெகுவாய் குறைந்துள்ளது.
ஆறுதலின் ஊற்றாகிய நல்லாயன், இளைப்பாறுதல் தேடும் அனைத்து மக்களையும் அமைதி நிறைந்த பசும்புல் வெளிக்கு அழைத்துச் சென்று, இளைப்பாறச் செய்ய வேண்டுமென்று உருக்கமாய் மன்றாடுவோம்.

திருப்பாடல் 23: 1-2ஆண்டவரே என் ஆயன். எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.







All the contents on this site are copyrighted ©.