2010-09-07 15:35:07

செப்டம்பர் 08 நாளுமொரு நல்லெண்ணம்


“மெழுகு திரிகள் செய்யும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. மக்கள் சூழ்ந்து நின்று ‘Happy Birthday’ பாடினர்.” ஹாலிவுட் நடிகர் ஒருவர் - Stephen Wright - ஒருமுறை நகைச்சுவையாக இதைச் சொன்னார்.
நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டாலும், எரியும் மெழுகு பிறந்தநாளை நினைவுபடுத்துவது நல்லதொரு எண்ணம். பிறந்த நாள் என்றதும் நம் மனதில் தோன்றும் கேக், மெழுகுதிரி இரண்டும் பொருள் நிறைந்த அடையாளங்கள். உருகினாலும் ஒளி தரும் மெழுகும், வெட்டப்பட்டாலும் இனிமையைத் தரும் கேக்கும் இணைந்து சொல்லித் தரும் பிறந்த நாள் பாடங்கள் உயர்ந்தவை.
குடும்பத்தின் பிறந்த நாட்கள் பலவற்றில், அன்னையின் பிறந்த நாள் தனியொரு இடம் பெறும். ஒவ்வோர் அன்னையும் தன்னையே மெழுகென உருக்கி, தன் பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றுவதும், அவர்கள் வாழ்வை இனிமைப் படுத்துவதும் உலகம் அனுபவித்து வரும் உண்மை.
 செப்டம்பர் 8 இயேசுவின் அன்னையும், நம் அன்னையுமான மரியாவின் பிறந்தநாள். இனிமையும், நலமும் வழங்கும் அன்னை மரியாவுக்கு நம் உளம் நிறைந்த, அன்பான, பணிவான வாழ்த்துக்கள், வணக்கங்கள்.







All the contents on this site are copyrighted ©.