2010-09-07 15:41:22

இலங்கை அரசியல் சட்ட திருத்த மசோதாவிற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் எதிர்ப்பு


செப்.07,2010. இலங்கையில் அரசுத்தலைவரின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மேல் நீட்டிப்பதற்கு வாய்ப்பளிக்கும் 18வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள் உட்பட குடியுரிமை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையில் முழு அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரின் பதவியை வலுப்படுத்திக்கொள்வதற்கு உதவும் இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு இப்புதன் கிழமையன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட கொழும்பு ஆங்லிக்கன கிறிஸ்தவ சபை ஆயர் துலீப் தெ சிக்கேரா, நாட்டில் ஜனநாயகச் சுதந்திரத்தை விரும்பும் எல்லாரும் இந்த அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.

இத்தகைய மாற்றங்கள் நாடாளுமன்றம் வழியாகக் கொண்டுவரப்படக் கூடாது என்றுரைக்கும் ஆயரின் அறிக்கை, இம்மசோதா திரும்பிப் பெறப்பட வேண்டும் மற்றும் இது குறித்து பொதுவில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது.

அமலமரி தியாகிகள் சபையினர் நடத்தும் சமய மற்றும் சமூக மையமும் இதற்கு எதிரான சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது, இன்னும், சமய மற்றும் அரசியல் தலைவர்களுக்குச் செய்திகளையும் அனுப்பியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.