2010-09-06 10:35:11

செப்டம்பர் 6. நாளும் ஒரு நல்லெண்ணம்.


ஜெபம் என்பது வேண்டுதல் என்று அர்த்தம் பெற்று, தேவைப்படும்போது மட்டும் இறைவனை அண்டுவது என்றாகிவிட்டது.

தேவைகளுக்காக இறைஞ்சும் நேரங்களைவிட நன்றி கூற என இறைவனை அணுகும் நேரங்கள் மிகமிகக் குறைவு.

பல ஜெபங்களில் வார்த்தை ஜாலங்கள், வார்த்தை அலங்காரங்கள் முதன்மை பெற்று வெறும் வார்த்தைக் கோர்வையாகிப்போனது வழிபாடு.

வழிபாட்டுப் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொண்டவைகளோ, மனதைத் தொடாத மனப்பாட ஒப்புவிப்புச் ஜெபங்களாகிவிட்டன.

சாதாரண உரையாடல் கூட ஜெபமாகலாம். ஏன்? மௌனம்கூட ஜெபமாக முடியும்.

இதயம் திறந்து இறைவனிடம் பேசுவதும் இறைவன் பேசும்போது நம் இதயம் திறப்பதுமே ஜெபம்.

நம் குரல் செவிமடுக்கப்படுகிறது என நம்பும்போதுதான் அது ஜெபமாகிறது.

கேட்பது கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லையென்றால் அங்கு கேட்பதில் அர்த்தமில்லை.

அந்த ஊரில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மழையில்லை. ஊரெல்லாம் ஒன்று சேர்ந்து ஊருக்கு வெளியே இருக்கும் ஏரிக்கரையில் நின்று மழைக்காக ஜெபிப்பதாக முடிவாயிற்று. ஜெபிக்கும் நாளும் வந்தது. மக்களெல்லாம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அந்த ஏரிக்கு நடந்துச் சென்று செபித்தனர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தான் குடையையும் தூக்கிக்கொண்டுச் சென்றார்.

நம் உள்ளத்தையும் ஊடுருவிச்சென்று அறிய வல்ல இறைவனிடம் நம் தேவைகளுக்காக ஜெபிக்கவேண்டியது அவசியமா என்றக் கேள்வி எழலாம். குழந்தைகள் கேட்காமலேயே பெற்றோர் அனைத்தையும் வழங்கி வந்தால் அந்த உறவு எப்படியிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

கருத்துப் பரிமாற்றங்களுக்கும், உள்ளப் பகிர்வுக்கும் அங்கு தேவையேயில்லை.

இறைவனிடம் நாம் கேட்கும்போது, நம் தாழ்ச்சியும் இயலாமையும் தான் அங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம், நமக்கானக் கொடைகளைப் பெற நாம் நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்ற அது உதவுகிறது.

ஆம். கேட்டுப் பெறும்போதுதான் நம் நிலையை உணர முடிகிறது.

தேவைகளை முன் நிறுத்திக் கேட்கும்போது, பலவேளைகளில் அவை கிடைப்பதே இல்லையே எனவும் கேட்கத் தோன்றுகிறது.

உண்மை தான். காரணங்கள் இல்லாமல் எந்த செயலும் இடம்பெறுவதில்லை. நமக்கானக் கொடைகள் வேறு மேலான காரணங்களுக்காகத் தள்ளிப்போடப்படலாம். அல்லது வேறு விதமாக நிறைவேற்றப்படலாம். கேட்டது கிடைக்கவில்லையென்றால் அதுவும் இறைத்திட்டமே, எல்லாம் நன்மைக்கே என விசுவசிப்பதுதான் ஜெபத்தின் வலிமையே. இல்லையெனில், ஏமாற்றங்களால் ஜெபத்தின் தொடர்ச்சி தடைபட்டுப் போய்விடும்.

ஜெபம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஆயுதம், மனதின் சலனத்தைத் தெளிவாக்கும் கருவி,

கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கை.








All the contents on this site are copyrighted ©.