2010-09-06 15:42:44

19ம் நூற்றாண்டு திருத்தந்தை பிறந்த ஊரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.06,2010. வரலாற்றின் உண்மைத்தன்மைக்குள் செயல்படும் கிறிஸ்தவர்கள் அதன் உள்ளார்ந்த சக்தியின் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுப்பவர்களாய், அதன் ஆழமான மாற்றத்திற்கான நன்மைதரக்கூடிய மற்றும் அமைதிநிறை சக்தியாகத் திகழ வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உலகில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு திகழ வேண்டுமென்பதையே திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் பரிந்துரைக்கின்றன மற்றும் இவை நிலையான மாற்றத்திற்கான தகுதிவாய்ந்த ஒரு வரையறையாக மனச்சான்றின் வளர்ச்சியில் நோக்கம் கொண்டுள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.
1878ம் ஆண்டு பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 13ம் சிங்கராயர் பிறந்ததன் 200ஆம் ஆண்டை முன்னிட்டு அத்திருத்தந்தை பிறந்த Carpineto Romano என்ற நகருக்கு இஞ்ஞாயிறன்று சென்று திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 13ம் சிங்கராயர், 1891ம் ஆண்டில் வெளியிட்ட Rerum Novarum என்ற திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் திருமடல் மூலம் அவர் மிகவும் புகழ்பெற்றவராய் விளங்கினாலும் அவர் எல்லாவற்றையும்விட மாபெரும் விசுவாச மனிதராகவும் ஆழமான பக்திமானாகவும் இருந்தார் என்பதை உறுதிபடத் தெரிவித்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
இதுவே பாப்பிறை உட்பட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒவ்வொன்றுக்கும் எப்பொழுதும் அடிப்படையாக அமைய வேண்டியது என்றார் திருத்தந்தை.
திருத்தந்தை 13ம் சிங்கராயருக்கு எதிராக அக்காலத்தில் நடைபெற்ற கடுமையானப் போராட்டங்களுக்கு மத்தியில் உறுதியான பாதையில் கத்தோலிக்கரை வழிநடத்த உதவியது அத்திருத்தந்தையின் ஆழமான பக்தியும் விசுவாசமுமே என்றும் அவர் கூறினார்.காஸ்தெல் கந்தோல்போவுக்கு சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Carpineto Romano நகரில் திருப்பலி நிகழ்த்தி மக்களை ஆசீர்வதித்த பின்னர் காஸ்தெல் கந்தோல்போவுக்குத் திரும்பி அங்கு ஞாயிறு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.