2010-09-04 14:35:02

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகளில் திருத்தந்தை நம்பிக்கை - திருப்பீடப் பேச்சாளர்


செப்.04,2010. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகளில் திருத்தந்தை நம்பிக்கையைக் காண்பதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.

வத்திக்கான் தொலைகாட்சியில் "Octava Dies" என்ற நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, புனித பூமியிலும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதி ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தானும் அகிலத் திருச்சபையும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகத் திருத்தந்தை இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பேரெசிடமும் தெரிவித்தார் என்றார்.

இதற்கு முன்னர் இத்தகைய பல பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளதையும் இதிலுள்ள கஷ்டங்களையும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.

இவ்வியாழனன்று வாஷிங்டனில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. அடுத்த பேச்சுவார்த்தைகள் எகிப்தில் இம்மாதம் 14,15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.