2010-09-03 16:18:39

திருத்தந்தை - கடவுள் இல்லாத உலகு நரகமாக மாறிவிடும்


செப்.03,2010. சமுதாயம் மற்றும் திருச்சபையின் வருங்காலமாக இருக்கின்ற இளையோர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய இறைவனில் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை ஸ்பெயினின் மத்ரித்தில் சிறப்பிக்கப்படவிருக்கும் 26வது கத்தோலிக்க உலக இளையோர் தினத்திற்கென இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பா தனது கிறிஸ்தவ வேர்களை மீண்டும் கண்டுணர வேண்டியதன் பெரும் தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில் இந்த மத்ரித் கூட்டம், “இயேசு கிறிஸ்துவில் வேரூன்றி, கட்டியெழுப்பப்பட்டவர்களாய் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்” (கொலோ.2,7 ) என்ற புனித பவுலின் வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டு இடம் பெறுகின்றது என்று திருத்தந்தை தனது செய்தியில் கூறியுள்ளார்.

வேரூன்றுதல், கட்டியெழுப்பப்படுதல், உறுதியாக இருத்தல் ஆகிய மூன்று சொற்கள் வெளிப்படுத்தும் ஆழமானக் கருத்துக்களை விளக்கியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவைச் சொந்த நண்பராகப் பாவித்து அவரின் வார்த்தையின்படி ஒவ்வொரு நாளும் வாழுமாறு இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

கடவுளைத் தங்கள் சொந்த வாழ்விலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒதுக்கி வாழும் இவ்வுலகப் போக்கில், கிறிஸ்தவர்கள், குறிப்பாக இளையோர், தங்களை இழந்து விடாமல் வாழக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

கடவுள் இல்லாத உலகு நரகமாக மாறிவிடும், அதாவது தன்னலம், பிரிந்த குடும்பங்கள், தனிமனிதருக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் காழ்ப்புணர்வு, அன்பு, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை பற்றாக்குறை ஆகியவை நிறைந்த நரகமாக உலகு இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மாறாக, எங்கெல்லாம் தனிமனிதரும் நாடுகளும் கடவுளின் பிரசன்னத்தை ஏற்று அவரை உண்மையில் வழிபட்டு அவரது குரலைக் கேட்டு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எல்லாரின் மாண்புமதிக்கப்படு்ம் அன்புக் கலாச்சாரம் கட்டி எழுப்பப்படுகின்றது என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.