2010-09-02 15:47:32

லாகூரில் மதச் சடங்கில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அந்நாட்டு பேராயர் கண்டித்துள்ளார்


செப்.02,2010. பாகிஸ்தான் லாகூரில் நடந்த ஓர் இஸ்லாமிய மதச்சடங்கில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அந்நாட்டு பேராயர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இப்புதனன்று லாகூரில் ஷியா முஸ்லீம்களின் ஒரு மதச் சடங்கில் தற்கொலைப் படையினரால் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் உயிர்களை இழந்தும், இன்னும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ள வேளையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் மிகவும் கோழைத்தனமான ஒரு செயல் என்று லாகூர் பேராயர் லாரன்ஸ் சல்தானா கூறினார்.

அனைத்துலகக் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வெள்ளத்திற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இது போன்ற ஒரு சம்பவம் உலக சமுதாயத்திற்கு முன், நம்மைப் பெரிதும் தலை குனிய வைக்கிறது என்று பேராயர் சல்தானா மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.