2010-09-01 16:16:18

பாகிஸ்தானில் கிறிஸ்தவ கிராமத்திற்கு வெள்ள நீரைத் திருப்பி விட்ட அரசியல்வாதி


செப்.01, 2010 பாகிஸ்தான் வெள்ளத்தில் ஓர் அரசியல்வாதியின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாதென, அந்த வெள்ளம் ஒரு கிறிஸ்தவ கிராமத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

Muzaffargarh பகுதியில் உள்ள கொக்கராபாத் Khokharabad என்ற கிராமத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மிகவும் ஏழைகளான விவசாயக் கூலிகள் என்றும், அவர்கள் கிராமம் முழவதும் வெள்ளத்தில் மூழ்கியதெனவும் இச்செவ்வாயன்று Fides செய்தி நிறுவனத்திற்குத் தகவல் வழங்கிய அரசுசாரா பணிக் குழுக்கள் தெரிவித்தன.

Muzaffargarh பகுதியில் நிலங்கள் கொண்ட அரசியல்வாதி Jamshed Dasti, தன் நிலங்களில் வெள்ள நீர் புகக்கூடாதென தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டதால், வெள்ள நீர் கிராமத்தில் புகுந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த கிராமத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றிய அபாய அறிக்கை எதுவும் தரப்படாததால், திடீரென அவர்களைச் சூழ்ந்த வெள்ளத்தில் 15 கிறிஸ்தவர்கள் இறந்தனர் என்றும், மேலும் 377 கிறிஸ்தவர்கள் வீடுகளை இழந்தனர் என்றும் Fides செய்திகள் கூறுகின்றன.

தனி ஒருவரின் நிலங்களைக் காப்பதற்கு, தங்கள் கிராமத்தையே அழித்துள்ள அரசியல்வாதியின் செயல் மனிதாபிமானம் அறவே அற்ற செயல் என்று கிராமத் தலைவர் Taj Masih கூறியுள்ளார்.

இது தன் சொந்த முடிவு அல்ல என்றும் அரசின் திட்டம் என்றும் Dasti கூறும் வேளையில், வெள்ள நீரைத் தடுக்க இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தாங்கள் எந்த வகையிலும் ஆணைகள் தரவில்லை என்று அரசு மறுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.