2010-09-01 16:18:06

இலங்கைப் பெண் உடம்பில் ஆணிகளை புகுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று இலங்கையில் போராட்டம்


செப்.01, 2010 சவுதியில் வீட்டுப் பணி செய்து வந்த இலங்கைப் பெண் ஆரியவதியின் உடம்பில் ஆணிகளைப் புகுத்திய சவுதி நாட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று இலங்கையில் போராட்டம் ஒன்று இத்திங்களன்று மேற்கொள்ளப்பட்டது.

மூன்று குழந்தைகளின் தாயும், 47 வயது நிறைந்தவருமான ஆரியவதி, ஏப்ரல் மாதம் முதல் சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஒரு வீட்டில் பணி புரிந்து வந்தவர். அந்த வீட்டு உரிமையாளர்கள் ஆரியவதியின் உடலில் செலுத்திய 24 ஆணிகளில் 13 ஆணிகளும், ஐந்து ஊசிகளும் இலங்கையில் நடந்த ஒரு சிகிச்சையில் அவர் உடலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொடுமையை எதிர்த்து, கத்தோலிக்க குருக்கள், அருள்சகோதரிகள், புத்தத் துறவிகள் உட்பட ஏறத்தாழ 200 பேர் கொழும்புவில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் முன் இத்திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம் பெர்யர்ந்து பிற நாடுகளில் பணி புரியும் இலங்கைத் தொழிலாளிகளின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆரியவதியின் உடலில் காணப்பட்ட ஆணிகளைக் குறித்த எக்ஸ்ரே அறிக்கை, மற்றும் மருத்துவர்கள் அறிக்கைகளை சவுதி தூதரகத்திற்குச் சமர்பித்துள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்தது.

இதற்கிடையே, இந்தக் கொடுமைகளைச் செய்த சவுதி குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வேறொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.