2010-09-01 16:10:34

ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்


செப்.01, 2010 தென் கொரியாவின் சோலில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறியுள்ள திருத்தந்தை, “ஆசியாவில் இன்று இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற இந்த மாநாட்டின் மையக்கருத்து, பொது நிலையினரைக் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கு மேலும் ஊக்குவிக்கும் என்று கூறினார்.

இன்றைய உலகின் மக்களில் இரண்டில் ஒரு பகுதியினர் வாழும் ஆசிய நாடுகள் பழம் பெரும் மதங்களுக்கும், ஆன்மீகப் பாரம்பரியங்களுக்கும், பல்வேறு கலாச்சாரங்களுக்கும் தொட்டிலாக அமைந்துள்ளதென்றும், ஆசியாவில் முன்பு எப்போதும் காணாத வகையில் பொருளாதார முன்னேற்றமும், சமுதாய மாற்றங்களும் இப்போது உருவாகியுள்ளன என்றும் திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

“மக்களுக்கு இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியும் தேவைப்படுகிறது, வாழ்வளிக்கும் நீருக்குத் மக்கள் கொண்டுள்ள தாகத்தை இயேசுவே தீர்க்க முடியும்” என்று மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறியதை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் செய்தியில் மீண்டும் நினைவு படுத்தியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமான ஆசியாவில், கிறிஸ்துவை அறிவிக்கும் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, இந்தப் பணியில் பொது நிலையினர் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

பொது நிலையினர் மேற்கொள்ளும் திருமண வாழ்வு, குடும்ப வாழ்வு ஆகியவை வழியே அவர்கள் எடுத்துக்காட்டாகவும், சாட்சிகளாகவும் வாழ வேண்டும் என்ற தன் ஆவலைத் திருத்தந்தை இந்தச் செய்தியில் கூறியுள்ளார்.

ஆசியாவின் பல்வேறு நாடுகளில் வெகு சிறப்பாக மறைக் கல்விப் பணியைச் செய்து வருவோரை இச்செய்தியில் நன்றியுடன் வாழ்த்தும் திருத்தந்தை, இதேபோல், பங்குப் பேரவைகள், இன்னும் பல பிறரன்பு அமைப்புக்களில் உழைத்து வரும் பொது நிலையினரை வாழ்த்தி, தொடர்ந்து இந்தப் பணிகளில் அவர்கள் இன்னும் ஆர்வமாய் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கருத்தரங்கில் தூய ஆவியின் கொடைகள் அனைத்தும் வந்து இறங்க வேண்டுமென்றும், திருச்சபையின் அன்னையாம் மரியாவின் பரிந்துரையும் வழிநடத்துதலும் இந்தக் கருத்தரங்கில் இருக்க வேண்டுமென்றும் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசியுடன் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இச்செய்தியினை வழங்கியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.