2010-08-31 16:00:53

விவிலியத் தேடல்


RealAudioMP3
சென்ற வார விவிலியத் தேடலின் இறுதியில் நம் காட்சி தியானத்தில், கற்பனையில் விரிந்த அந்தப் பசும்புல் வெளிக்கு மீண்டும் வந்திருக்கிறோம். அந்தப் புல்வெளியின் ஒரு பகுதியில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஆடுகள் மத்தியில், தன்னையே மறந்து இசையெழுப்பும் ஆயனின் புல்லாங்குழலை மீண்டும் கேட்கிறோம்.
ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.” 
திருப்பாடல் 23ன் இரண்டாம் திருவசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் பசும்புல் வெளியைப் பற்றி நம் சிந்தனைகளைத் தொடர்வோம். பரந்து விரிந்த பசும்புல்வெளிகள் மகிழ்வைத் தரும் என்று மனநல அறிஞர்கள் சொல்கின்றனர். அதற்கான காரணங்களையும் சொல்கின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமைக் கம்பளமாய் விரிக்கப்பட்டிருக்கும் புல்வெளியைக் கண்டதும் பாதுகாப்பான ஓர் உணர்வு மனதை நிறைக்கும். நமக்குத் தேவையான உணவு அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உணர்வு... மறைவிடங்களில் பதுங்கியிருந்து மிருகங்கள் நம்மைத் தாக்காது என்ற உணர்வு... இது போன்ற உணர்வுகளை பரந்த பசும்புல் வெளி நமக்குத் தருகிறதென மனநல அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்தப் பாதுகாப்பு உணர்வுகளை வெளிப்படுத்த தாவீது இவ்வரிகளைச் சொன்ன போது, அவரது முன்னோரைப் பற்றி நினைத்திருப்பார். அடிமைகளாக, அந்நிய நாட்டில் தன் முன்னோர்கள் பசியைத் தீர்க்கவும், பயங்களைப் போக்கவும் ஒவ்வொரு நாளும் போராடியதை நினைத்திருப்பார். தன் முன்னோர்களின் அவல நிலை தனக்கு இல்லை என்பதை எண்ணி, நன்றியோடு இந்த வரியைக் கூறியுள்ளார். நாம் வாழும் காலத்திலும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவைகளிலிருந்து தப்பித்து, ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது நம் தியான முயற்சிகள் வழியே, பசும்புல் வெளியொன்றில், பரிவான ஆயனின் கண்காணிப்பில் நாம் இளைப்பாறுவது மிகுந்த நன்மைகளைத் தரும்.

பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். என்ற இந்த திருவசனத்தைப் பற்றி தன் புத்தகத்தில் விளக்கிச் சொல்லும் யூத குரு Harold S.Kushner, ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். Kushnerம் அவரது நண்பர்களும் ஒரு முறை சந்தித்தபோது, அவர்களுக்குள் அறிவுப் புதிரான ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. “எப்போது 20ம் நூற்றாண்டு ஆரம்பமானது?” என்பது அந்த அறிவுப் புதிர். நாள் காட்டியை வைத்து, இந்தப் புதிருக்கு எளிதில் விடை சொல்லிவிடலாம். 1900 அல்லது 1901ம் ஆண்டு 20ம் நூற்றாண்டு ஆரம்பமானது என்று எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்தப் புதிரின் உள் அர்த்தம் வேறு... அந்தப் புதிரில் சொல்லப்பட்ட 20ம் நூற்றாண்டு என்பது வெறும் வருடங்களைக் கணக்கிடும் சிந்தனை அல்ல. வாழ்வின் மாற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு சிந்தனை. 19ம் நூற்றாண்டில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்வும், 20ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்த வாழ்வும் பெரிதும் மாறுபட எந்த ஒரு நிகழ்ச்சி காரணமானது? என்ற உள் அர்த்தத்தோடு இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. 20ம் நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்கள், பயணம் செய்வதற்காக நாம் பயன்படுத்திய மோட்டார் வாகனம். என்ற நிகழ்ச்சிகளெல்லாம் பேசப்பட்டன. இறுதியில், 20ம் நூற்றாண்டை 19ம் நூற்றாண்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய நிகழ்வு, 20ம் நூற்றாண்டை மனித குலத்திற்கு ஆரம்பித்து வைத்த முக்கிய நிகழ்வு, நாம் கண்டுபிடித்த மின் சக்தி என்று அங்கிருந்தவர்கள் ஒத்துக் கொண்டனர்.
மின்சக்தியைக் கண்டு பிடிப்பதற்கு முன்வரை, நம் முன்னோர்கள் சூரியன் எழும்போது எழுந்து, சூரியன் மறைந்ததும் உறங்கச் சென்றனர். எண்ணெய் விளக்குகள், மெழுகு திரிகள் கைவசம் இருந்தாலும், சூரியனின் மறைவுக்குப் பிறகு, மனிதர்கள் வாழ்வு மிகவும் சுருங்கி இருந்தது.

மின்சக்தி, மின் விளக்குகள் வந்ததும், நினைத்தபோதெல்லாம், வெகு எளிதாக இருளை விலக்க முடிந்தது. சூரிய மறைவுடன் வந்த இருள் என்ற இயற்கை நியதியை நாம் வென்றது போல் உணர்ந்தோம். இரவைப் பகலாக மாற்ற ஆரம்பித்தோம். ஆனால், இதை ஒரு வெற்றி என்று, முன்னேற்றம் என்று சொல்வதற்குத் தயக்கமாக உள்ளது.
மின்சக்தியால், இரவை வென்றபின், இரவைப் பகலாக்கியபின், இரவுக்கே உரிய அமைதி, நிம்மதி, ஒய்வு இவைகளை நாம் வென்றோமா? இழந்தோமா? மனித வரலாற்றில் ஒவ்வொரு முறையும் நாம் இயற்கையை வென்றதாக மகிழ்ந்தோம். பின்னர், ஏன் வென்றோம் என்று வருந்தியும் இருக்கிறோம்.

துவக்க நூலில் நம் முதல் பெற்றோர் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படும் அந்த முதல் தோட்டம் - சிங்கார வனம் - இறைவன் நமக்களித்த அப்பழுக்கற்ற பல இயற்கைக் கொடைகளின் அடையாளம். இயற்கையை வெல்கிறோம் என்ற கற்பனையில் பல ஆயிரம் ஆண்டுகள் அந்தத் தோட்டத்தைச் சீரழித்து விட்டு, மீண்டும் அந்தத் தோட்டம் கிடைக்காதா என்று 2010ம் ஆண்டில் எவ்வளவு ஏங்குகிறோம்?
இயற்கையை வென்ற நம் அறிவியல் சாதனைகளால் இயற்கையும் நாமும் எதிரிகளாகிவிட்டோம். நாமும் கடவுளும் எதிரிகளாகிவிட்டோம். கடவுளோடும் இயற்கையோடும் நாம் மீண்டும் சமாதானமாய் வாழ, மீண்டும் அந்தத் தோட்டத்திற்குள் நுழைய...வழிகளைச் சொல்லும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று Evan Eisenberg என்பவர் எழுதிய "The Ecology of Eden" அதாவது, ‘சிங்கார வனத்தின் சுற்றுச்சூழல்’ என்ற புத்தகம். இந்த புத்தகத்தில் 'மலைக் கலாச்சாரங்கள்' 'கோபுரக் கலாச்சாரங்கள்' என்று இருவகைக் கலாச்சாரங்களைப் பற்றி Eisenberg பேசுகிறார்.
இறைவன் வழங்கியுள்ள படைப்பை வியந்து பாராட்டி, மதித்து, அந்தப் படைப்புடன் ஒன்றித்து வாழ்ந்து வருவது மலைக் கலாச்சாரம். உயர்ந்ததொரு மலையை வியந்து, நிமிர்ந்து பார்க்கும் போது, நம்மையும் அறியாமல், நம் கண்கள் அந்த மலை முகடுகளைத் தொடும் விண்ணையும் பார்க்கும். மலைகள் இறைவனின் உறைவிடம் என்பது விவிலியம் நமக்குச் சொல்லித் தரும் ஒரு பாடம். பல மதங்களில் இந்த நம்பிக்கை உள்ளது.
திருப்பாடல்கள் 68: 16-18
ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே!... இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார். என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்... உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்... கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்.
திருப்பாடல்கள் 121: 1-2
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
மலைக் கலாச்சாரத்தில் ஊறியிருந்த தாவீதின் பார்வை இது.

இதற்கு மாறுபட்டிருப்பது கோபுரக் கலாச்சாரம். மலையைக் கடவுளின் படைப்பாக, இறைவனின் உறைவிடமாகப் பார்த்து இரசிப்பதற்குப் பதில், தான் கட்டவிருக்கும் கோபுரத்திற்குத் தேவையான மூலப் பொருள்களான மண், கல் ஆகியவை இருக்கும் ஒரு கிடங்காக அந்த மலையைப் பார்க்கும் ஒரு பார்வை இது. இயற்கையுடன் ஒன்றித்து வாழாமல், இயற்கையைப் பகைத்து, இயற்கையை அடக்கி ஆள, இயற்கையை வெல்ல… கோபுரங்களைக் கட்டும் கலாச்சாரம் இது. இந்தக் கலாச்சாரத்தில் கோபுரங்கள் வளர, வளர... அந்தக் கோபுரங்களுக்கு மண் கல் இவைகளைத் தந்த மலைகள் காணாமல் போய்விடும். அந்த மலைகளோடு சேர்ந்து இறைவனும் காணாமற் போய்விடுவார். கடவுள் இந்தக் கலாச்சாரத்தில் காணாமற் போய்விடுவதால், உருவாக்கப்பட்ட பொருட்களையே கடவுளென நினைத்து, மனிதர்கள் வழிபட ஆரம்பித்து விடுவர்.

மலைக் கலாச்சார மக்களும், கோபுரக் கலாச்சார மக்களும் மோதிக் கொண்ட சம்பவங்கள் மனித வரலாற்றில் நடந்துள்ளன.
1853ல் அமெரிக்காவின் 14வது அரசுத் தலைவராகப் பதவியேற்றவர் Franklin Pierce. இவர் பதவிக்கு வந்த அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வாழ்ந்து வந்த பழங்குடியினரின் நிலப்பகுதியை விலைக்கு வாங்க முயன்றார். நிலத்தை விலை கொடுத்து வாங்குவதா? நினைத்தும் பார்க்க முடியாத ஒரு சீரழிந்த எண்ணம் அது என்று நினைத்தார் பழங்குடியினரின் தலைவர் Seattle. அவர் அரசுத் தலைவர் Pierceக்கு அழகானதொரு கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மலைக் கலாச்சாரத்தின் மகிமையைச் கோபுரக் கலாச்சார மக்களுக்குப் புரிய வைக்க முயலும் ஓர் அற்புதக் கடிதம் இது.

கோபுரக் கலாச்சாரத்தில் அதிகம் மூழ்கி, அதனால் மலைகளை, இறைவன் தந்த அந்தத் தோட்டத்தை முற்றிலும் இழந்துவிடும் ஆபத்தில் இருக்கும் நாம் இப்போது விழிப்புணர்வு பெற்று கூறி வரும் உண்மைகளை 1854ல் அந்தத் தலைவன் கூறினார். தலைவன் Seattleன் முழு மடலையும் மொழிபெயர்த்துக் கூற எனக்கு மிகவும் ஆசை. ஆனால், நேரம் கருதி, அந்த மடலின் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் இணையதளத்தில் இந்த மடலைத் தேடிக் கண்டுபிடித்துப் படியுங்கள். சுற்றுச் சூழல் குறித்த பல பாடங்களை இந்த மடல் சொல்லித் தரும்.

வானத்தை, பூமியை எப்படி வாங்கி விற்க முடியும்? அந்த எண்ணமே எங்களுக்கு மிகவும் அந்நியமான, ஏற்றுக் கொள்ள முடியாத எண்ணம். சுத்தமான காற்று, தெளிந்த நீர், அழகிய இந்த பூமி இவைகளை நாம் யாரிடமிருந்து, எங்கிருந்து வாங்கினோம், இப்போது விற்பதற்கு? இவைகளெல்லாம் எங்களுடன் வளர்ந்தவை, எங்களின் ஓர் அங்கம்.
எங்கள் வாழ்வு முறை, கலாச்சாரம் ஆகியவை வெள்ளைச் சகோதரர்களாகிய உங்களுக்கு வினோதமாகத் தெரிகின்றன. நிலம் எங்கள் குடும்பம். அதனால், எங்கள் சொந்தம். உங்களுக்கோ நிலம் ஒரு பொருள். உங்களுக்குச் சொந்தமான பொருள். எனவே, அந்தப் பொருளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள், தொலைக்கிறீர்கள், அழிக்கிறீர்கள். புதிய நிலத்தை வாங்கப் போர்புரிகிறீர்கள், அல்லது இரவோடிரவாக கொள்ளை அடிக்கிறீர்கள். நிலத்தை இப்படி ஒரு பொருளாக பாவிக்கும் உங்கள் பேராசையால், இந்த நிலம் பாலைவனமாகி வருகிறது.
எங்களுக்கு இந்தக் காற்று மிகவும் மதிப்பிற்குரியது. இந்தக் காற்றை நாங்களும், எங்களைச் சுற்றியுள்ள மிருகங்கள், மரங்கள் எல்லாமே சுவாசிக்கிறோம். நீங்கள் இந்தக் காற்றை மதிப்பதில்லை. எனவே இதை மாசு படுததுகிறீர்கள்.
எங்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மை உங்களுக்கும் ஒரு நாள் தெரிய வரும். அதாவது, எங்கள் கடவுளும், உங்கள் கடவுளும் ஒருவரே. நாங்கள் மதித்துப் போற்றும் இந்த பூமி எங்கள் கடவுளும் மதிக்கும் பூமி. இந்தப் பூமியை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அந்த இறைவனையே அவமதிப்பதற்குச் சமம். இப்படி இயற்கையோடு இயைந்த மலைக் காலாச்சாரத்தில் நாமும் வளர முயல்வோம். அந்த மலைகளில் வாழும் நம் ஆயனாம் இறைவன் நம்மைத் தமது பசும்புல் வெளிகளில் இளைப்பாறச் செய்வாராக.







All the contents on this site are copyrighted ©.