2010-08-31 15:47:48

ஆசியக் கண்டத்தில் பிறந்த கிறிஸ்துவை அறிவிப்பதற்கு ஆசியக் கத்தோலிக்கருக்குப் பெரும் கடமை இருக்கின்றது - கர்தினால் ரில்கோ


ஆக.31,2010. ஆசியக் கண்டத்தில் பிறந்த கிறிஸ்துவை அறிவிப்பதற்கு ஆசியக் கத்தோலிக்கருக்கு மாபெரும் கடமை இருக்கின்றது என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ கூறினார்.

தென் கொரியாவின் சோலில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாடு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் ரில்கோ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிகப் பழமையானக் கலாச்சார மற்றும் சமயப் பாரம்பரியஙக்ளுக்குத் தொட்டிலான ஆசியாவில் கிறிஸ்து அறியப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டினார்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கை அதாவது நானூறு கோடிப் பேரைக் கொண்டுள்ள ஆசியக் கண்டத்தில் சுமார் 12 கோடிப் பேரே கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்து பிறந்த இந்தக் கண்டத்தில் இன்னும் பலர் கிறிஸ்துவை அறியாதிருக்கிறார்கள் என்றும் திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கூறினார்.

இதற்கு முந்தைய ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாடு இதே கொரியாவில் 1994ம் ஆண்டு நடைபெற்றது, இந்தப் பதினாறு ஆண்டுகளில் ஆசியாவில் ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து விழுக்காடு வீதம் திருச்சபை வளர்ந்து வருவதைக் காண முடிகின்றது என்றும் கர்தினால் ரில்கோ கூறினார்.

“ஆசியாவில் இன்று இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற தலைப்பில் சோலில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இம்மாநாடு இந்த செப்டம்பர் 5 வரை நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.