2010-08-28 15:54:17

கோதுமை உற்பத்தியில் புதிய மைல்கல்


ஆக.28,2010. பிரிட்டன் விஞ்ஞானிகள் கோதுமையின் மரபணு கட்டமைப்பை முதல்முறையாக உடைத்திருப்பதன் மூலம் கோதுமையின் விளைச்சலில் பல புதிய சாதனைகளை படைக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய, நோய் எதிர்ப்புத்தன்மை மிக்க, வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் தாக்குப் பிடித்து வளரக் கூடிய கோதுமை ரகங்களை உருவாக்குவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உலகம் வெப்பமடைந்து வருவது கோதுமை உற்பத்திக்கு அச்சுறுத்தலாகவுள்ள நிலையில் இக்கண்டுபிடிப்பு கோதுமை விளைச்சலுக்கு உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே நெல், மக்காச்சோளம் ஆகியவற்றின் மரபணு கட்டமைப்பு படியெடுக்கப்பட்டுவிட்ட பின்னணியில், தற்போது கோதுமையின் மரபணு கட்டமைப்பும் படியெடுக்கப்பட்டிருப்பது, உலகின் முக்கிய மூன்று உணவு தானியங்களிலும் புதிய ரகங்களை உருவாக்குவதற்கு தாவரவியலாளர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் வேளாண் அறிவியல் மூலம் புதிதாக ஒரு கோதுமை ரகத்தை உண்டாக்க வேண்டுமானால், அதற்கு குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் கோதுமையின் மரபணு கட்டமைப்பை தற்போது விஞ்ஞானிகள் படியெடுத்து விட்டதால், ஐந்து ஆண்டுகளிலேயே புது ரக கோதுமையை உருவாக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்








All the contents on this site are copyrighted ©.