2010-08-28 15:51:59

ஐரோப்பிய ஆயர்கள் “பசுமைத் திருப்பயணம்” நடத்தத் திட்டம்


ஆக.28,2010. “பசுமைத் திருப்பயணம்” வழியாக படைப்பு எனும் கொடைகள் குறித்த திருச்சபையின் கண்ணோட்டத்தை எடுத்துரைப்பதற்கு ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

வருகிற செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை பல ஐரோப்பிய நாடுகளுக்கு படகு, பேருந்து, தொடருந்து ஆகியவைகளில் விசுவாசிகளைப் பசுமைத் திருப்பயணமாக அழைத்துச் செல்வதற்குத் திருச்சபை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

“அமைதியைக் கட்டி எழுப்ப வேண்டுமானால் படைப்பைப் பாதுகாக்க வேண்டும்” என்ற 2010ம் ஆண்டின் திருத்தந்தையின் உலக அமைதி நாளுக்கானக் கருப்பொருளை மையமாக வைத்து இந்தப் பசுமைத் திருப்பயணம் இடம் பெறவிருக்கின்றது.

இந்தத் திருப்பயணத்தில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள் உட்பட பல பொதுநிலை விசுவாசிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

ஹங்கேரி நாட்டு எஸ்டர்காமிலிருந்து சுலோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா வரை படகிலும், பிராட்டிஸ்லாவாவிலிருந்து ஆஸ்ட்ரியாவின் St.Polten வரை பேருந்திலும், St.Polten லிருந்து Erlaufsee ஏரிவரை தொடருந்திலும் பின்னர் 10 கிலோ மீட்டர் தூரம் ஆஸ்ட்ரியாவின் Mariazell மரியா திருத்தலத்திற்கு நடைபயணமாகவும் இது இடம் பெறும்.








All the contents on this site are copyrighted ©.