2010-08-27 15:10:21

பல்வேறு மதத்தினர் மத்தியில் இடம் பெறும் வன்முறை ஒழிக்கப்படுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து செயல்பட திருப்பீடம் அழைப்பு


ஆக.27,2010. பல்வேறு மதத்தினர் மத்தியில் இடம் பெறும் வன்முறை ஒழிக்கப்படுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து செயல்படுமாறு திருப்பீட பல்சமய அவை அழைப்பு விடுத்துள்ளது.

ரம்ஜான் நோன்பு மாதத்தின் இறுதியில் சிறப்பிக்கப்படும் Id al-Fitr விழாவை முன்னிட்டு உலகின் எல்லா முஸ்லீம் மதச் சகோதரர்களுக்குமென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய அவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

பல்வேறு மதத்தினர் மத்தியில் இடம் பெறும் வன்முறைகளுக்கானக் காரணங்களைக் கோடிட்டுக் காட்டும் இச்செய்தி, அப்பாவி பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் சமய அதிகாரிகள் இவ்வன்முறைகளை அகற்றுவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளது.

மக்கள் எல்லாரும் அமைதியுடனும் பலன்தரும் வகையில் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு, ஒருவர் ஒருவரை மன்னித்து ஒப்புரவை ஏற்படுத்துவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டும் இச்செய்தி, மதங்களில் காணப்படும் பொதுவான கூறுகளை ஏற்று அவற்றிலுள்ள வேறுபாடுகளை மதிப்பதும், இன சமய வேறுபாடின்றி ஒவ்வொருவரின் மாண்பையும் உரிமைகளையும் அங்கீகரிப்பதும், நீதியான சட்டங்களை அறிவிப்பதும் உரையாடல் கலாச்சாரத்துக்கு அடிப்படையாக அமைகின்றன என்பதையும் வலியுறுத்துகிறது.

இவை குறித்த விழிப்புணர்வுக் கல்வி, வீடுகளிலும் பள்ளிகளிலும் ஆலயங்களிலும் மசூதிகளிலும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், இதன்மூலம் பல்வேறு மதத்தவர் மத்தியில் இடம்பெறும் வன்முறையை எதிர்க்கவும் பல்வேறு சமயச் சமூகங்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க முடியும் என்றும் திருப்பீட பல்சமய அவை தனது செய்தியில் கூறியுள்ளது.

இசெய்தியில் திருப்பீட பல்சமய அவை தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் மற்றும் அதன் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.