2010-08-25 12:16:16

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஆகஸ்ட் 25, 2010. தன் புதன் மறைபோதகத்தை, திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்க, அங்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த எண்ணற்ற திருப்பயணிகள் குழுமியிருந்தனர். இச்சனியன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் புனித அகுஸ்தீனார் குறித்து தன் சிந்தனைகளை பொது மறைபோதகத்தின்போது திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார் பாப்பிறை.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நண்பர்கள், வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். நம் கிறிஸ்தவ வாழ்வில் புனிதர்கள் என்பவர்கள் குறிப்பிடத்தக்க நண்பர்களாக, வழிகாட்டிகளாக உள்ளனர். அத்தகைய வழிகாட்டிகளுள் ஒருவராக எனக்கு இருப்பவர் புனித அகுஸ்தீனார். அவரின் விழாவை, வரும் சனியன்று திருச்சபை சிறப்பிக்க உள்ளது. உண்மையான வழியையும் உண்மை ஆதாரத்தையும் தரும் உண்மை குறித்த தேடல் பற்றிக் கற்பிப்பதே இப்புனிதரின் வாழ்வாய் அமைந்திருந்தது. இப்புனிதர் அகுஸ்தீனாரும், வரும் வெள்ளியன்று நாம் சிறப்பிக்க உள்ள இவரின் தாய் புனிதை மோனிக்காவும், நமக்கான அவர்களின் ஜெபங்களின் வழி நம்மோடு நடந்து வந்து நம்மை இறைவன் அருகேக் கொண்டுச் சேர்ப்பார்களாக.

இக்கருத்துக்களுடன் தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வன்முறைகளால் துன்புறும் சொமாலியா நாட்டிற்கானச் செபங்களுக்கும் அழைப்பு விடுத்தார். வன்முறைச் சம்பவங்கள் குறித்து அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தன்னைத் துன்பத்தில் ஆழ்த்துவதாகவும், சொமாலியாவில் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரோடும் தன் அருகாமையை அறிவிப்பதாகவும், துன்புறும் மக்களுக்கான சர்வதேச உதவிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறிய பாப்பிறை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.