2010-08-25 17:27:41

கந்தமால் படுகொலைகளுக்கு மேல்சாதி இந்துக்களின் பொருளாதார ஆதாயங்களே முக்கிய காரணங்கள் பேராயர் சீனத்


ஆக.25,2010. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஈராண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளுக்கு மேல்சாதி இந்துக்களின் பொருளாதார ஆதாயங்களே முக்கிய காரணங்கள் என்று அம்மாநில பேராயர் குறை கூறினார்.
ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கு எதிரானத் தாக்குதல்களில் உயிர் தப்பியவர்கள் இன்னும் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார் கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத்.
இந்த வன்முறையில் உயிர்தப்பிய 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இந்துமதத்திற்கு மாறினாலன்றி அவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு வரஇயலாத நிலையில் இருக்கின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார் பேராயர் சீனத்.
இக்கிறிஸ்தவர்களில் பெரும்பகுதியினர் தலித்துக்கள் என்றும் கூறிய பேராயர் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர் என்று கூறினார்.2008ம் ஆண்டு ஆகஸ்ட் வன்முறை தொடர்பாக 3,300 புகார்கள் உள்ளூர் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 831 புகார்களை காவல்துறை எடுத்துக் கொண்டது. இதுவரை 193 வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படடுள்ளன. கைது செய்யப்பட்ட 794 இந்து தீவிரவாதிகளில் 653 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏழு குற்றவாளிகளுக்கு மட்டுமே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.