2010-08-25 12:17:44

ஆகஸ்ட் 26 – நாளும் ஒரு நல்லெண்ணம்


அன்பின் உறைவிடம். அறிவின் இருப்பிடம்.

அவர்கள்தான் ஆசிரியர்கள்.

‘கண்ணுடையோர் என்போர் கற்றோர்’ என வள்ளுவரும், ஆசிரியரை கண் தந்தவராய் காட்டுகிறார். அவர்கள் தான் முரண்பாடுகளின் மோகம் அகற்றி பண்பாடு வளர்த்தவர்கள். கல்வி என்பது நாட்டை ஆள அல்ல, வாழும் நாட்களை ஆள எனக் கற்றுத் தந்தவர்கள்.

ஆம். ஊனமாயிருந்த முயற்சிகளுக்கு கல்விச் சிறகுகள் தந்தவர்கள்.

வார்த்தைகளில் வாய்மையைப் பாடமாக்கி, வழி மாறாமல் இருக்க ஒளியூட்டி, சிந்தனைச் சிறகில் திசை மாட்டி, நமக்குரிய இடம் சேர்க்கும் தியாகச்செம்மல்கள் ஆசிரியர்கள்.

கரை காணாக் கல்விக்கடலில் இவர்கள் மூச்சடைக்க, முத்தெடுத்ததோ நாம். உழைப்பு அவர்களுடையது. உயர்வோ நம்முடையது.

நம்மைத் திருத்த தண்டனைத் தந்து, வேதனையைத் தான் சுமந்தவர்கள்.

தன் மாணாக்கனைத் தகை சான்றோனாய் காட்டுவதே இவர்கள் இலட்சியமாயுள்ளது.

இன்றைய நம் வெற்றிகளின் ஆசான்கள் அவர்கள் தானே.

நம் வாழ்வெனும் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலிலும் ஓர் ஆசிரியரின் பெயர் உள்ளது.

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றார். மாதா பிதா குரு தெய்வம் என்றார்.

ஈசனுக்கும் ஈன்றவருக்கும் இடையே இணைப்பு பாலம் ஆனதும் ஆசானே.

ஈசனையும் ஆசானையும் அருகருகே அமர்த்திப் பார்த்து ஆனந்தம் கொள்கிறது மனம்.

ஆசான்கள் இல்லையெனில் கல்வி என்பது கனவாய் அல்லவாப் போயிருக்கும் ?

கற்றதை விளக்காக்கி, வழிகாட்டி, பகிர்ந்து கொள்பவரே ஆசிரியர்.

கல்லும் நொறுங்காமல், சிற்பமும் சிதறாமல், செதுக்கும் கலை தெரிந்தவர்கள் இவர்கள். இவர்கள் வடித்த சிற்பங்களும் இன்று சிற்பிகள் தாம்.

அப்படியெனில் நாம் ஒவ்வொருவருவரும் வாழ்வில் ஆசிரியரே, வழி காட்ட வேண்டியவரே.








All the contents on this site are copyrighted ©.