2010-08-24 16:41:52

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க உள்ளது சிங்கப்பூர் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.


ஆகஸ்ட் 24, 2010. பெரும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க முன் வந்துள்ளது சிங்கப்பூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று.

காரித்தாஸ் சிங்கப்பூரின் மனிதாபிமான உதவிகளுக்கான இவ்வமைப்பு, பாகிஸ்தான் நாட்டிற்கு 50 ஆயிரம் டாலர்களையும், 800 நீர் சுத்திகரிப்பு கருவிகளையும், 10ஆயிரம் போர்வைகளையும் உடனடியாக அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் ஒரே குடையின் கொண்டு செயல்பட உள்ள இவ்வமைப்பு கடந்த வெள்ளியன்றுதான் சிங்கப்பூர் பேராயர் நிக்கொலாஸ் கியாவால் துவக்கி வைக்கப்பட்டது.

சமூகத்திற்கான மறைப்பணி அர்ப்பணத்தின் அடையாளமாக, மனிதாபிமானப் பணிகளை நிறைவேற்றும் நோக்கில் சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருச்சபையால் இத்துயர்துடைப்பு அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கப்படுவதாக வாக்களிக்கப்பட்டுள்ள பணம் 80 கோடி டாலர்களுக்கு மேல் என அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.








All the contents on this site are copyrighted ©.