2010-08-24 17:04:49

விவிலியத் தேடல்


RealAudioMP3
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வாழ்ந்து வரும் நாம் ஒவ்வொருவரும் வரலாறு படைத்துள்ளோம்... அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றின் துவக்க வரிகள் இவை. அன்று வந்திருந்த ஒரு சில மின்னஞ்சல்களில் என் கவனத்தை முதலில் ஈர்த்தது இந்த மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலில் தொடர்ந்து வந்த தகவல் இது:
இந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 5 ஞாயிறு, 5 திங்கள், 5 செவ்வாய் கிழமைகள் உள்ளன. இது போன்று மீண்டும் நிகழ்வதற்கு இன்னும் 823 ஆண்டுகள் ஆகும். அதாவது, அடுத்த ஏழு, அல்லது எட்டுத் தலைமுறையினருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது... என்பதுதான் அந்தத் தகவல்.

இந்தத் தகவலைக் கண்ட எனக்கு உடனே எழுந்த எண்ணம் என்ன தெரியுமா? இந்த விவரத்தை நாளுமொரு நல்லெண்ணத்தில் நம் அன்புள்ளங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இந்த எண்ணத்தைச் செயல்படுத்துவதற்கு முன், மீண்டும் இந்தத் தகவலைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள இணையதளத்தில் தேடினேன்... படார்... டமார்... ஊதி வைத்த பலூனில் ஊசி பட்டது போல், என் ஆவல் நிறைந்த எதிர்பார்ப்பு வெடித்துச் சிதறியது..
எனக்கு மின்னஞ்சலில் வந்தத் தகவல் தவறானது என்பதை உணர்ந்தேன். யாரோ ஒருவர் இப்படி எழுதி அனுப்பிய இச்செய்தி Facebook, Twitter, மின்னஞ்சல் வழியாக இணையதளத்தில் காட்டுத் தீ போல் பரவிவிட்டது. அபூர்வம் என்று சொன்னதும், தவறானச் செய்திகளுக்கும் சிறகுகள் முளைத்து விடுகின்றன என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. உங்களுக்கு இந்தத் தகவல் வந்திருந்தால்... மன்னிக்கவும்...
ஆகஸ்ட் மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. அதேபோல் சனவரி, மார்ச் என்று வருடத்தில் ஏழு மாதங்களுக்கு 31 நாட்கள் உள்ளன. 31 நாட்கள் கொண்ட எல்லா மாதங்களிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐந்து முறை வரும். இந்த ஆகஸ்ட்டுக்கு முந்திய ஜூலை மாதத்தில் 5 விழாயன், 5 வெள்ளி, 5 சனிக் கிழமைகள் வந்தன. ஆகஸ்ட் மாதத்தில் 5 முறை ஞாயிறு, திங்கள், செவ்வாய் வந்திருப்பது 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம் இல்லை. 2004ம் ஆண்டில் இது போல் வந்திருந்தது. அதற்கு முன் 1999, 1993 ஆண்டுகளில் இவ்வாறு வந்தது. அடுத்த முறை இது போன்ற ஆகஸ்ட் வருவதற்கு 823 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. 2021ல், 2027ல் மீண்டும் இதுபோல் 5 முறை ஞாயிறு, திங்கள், செவ்வாய் கொண்ட ஆகஸ்ட் வரும். அதை நீங்களும், நானும் காணும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அபூர்வம், அதிசயம், நான் வரலாறு படைத்துள்ளேன் என்ற என் ஆவல் காற்றோடு கரைந்துவிட்டது. நீங்களோ நானோ இந்த ஆகஸ்ட் மாதம் வாழ்வதால் எந்த வரலாறும் படைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்வோம்.

ஆகஸ்ட் 2010 குறித்து வந்த இன்னொரு மின்னஞ்சலையும் அதைத் தொடர்ந்து இணையதளத்தில் நான் தேடிக் கண்டவைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இம்முறை, இது சரியான தகவல்.
ஆகஸ்ட் 27 வருகிற வெள்ளி இரவு வானில் இரு நிலவுகள் தெரியும். ஆம். செவ்வாய் கோள் பூமிக்கருகே - அதாவது, பூமிக்கு 3.46 கோடி மைல்கள் அருகே - வருவதால், அந்தக் கோள் ஏறக்குறைய நம் முழு நிலவைப் போல் ஒளிரும். எனவே அன்றிரவு இரு நிலவுகள் வானில் தெரியும். இந்த அபூர்வ நிகழ்வு அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடு இரவில் ஏற்படும் என்று இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில், இன்னும் பிற நாடுகளில் இந்த அபூர்வத்தைப் பார்க்க முடியுமா, எந்த நேரத்தில் பார்க்க முடியும் என்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த இரு நிலவுகளைப் பார்க்க விரும்புகிறவர்கள் சரியான விவரங்கள் தெரிந்து பார்த்துக் கொள்ளுங்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாறு காணாத நிகழ்வுதான். ஏனெனில் அடுத்த முறை செவ்வாய் கோள் பூமிக்கு இவ்வளவு அருகே வரும் ஆண்டு 2287.
இந்த மின்னஞ்சல்களால், அதைத் தொடர்ந்த என் இணையதளத் தேடல்களால் ஒன்று எனக்குத் தெளிவானது. இதுவரை என் வாழ்வில் எத்தனையோ ஆகஸ்ட் மாதங்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. இந்த 2010 ஆகஸ்ட் மாதம் அபூர்வம், அதிசயம் என்று சரியான, தவறான இரு தகவல்களால் இந்த ஆகஸ்ட் மாதத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகச் சிந்தித்திருக்கிறேன்.
மனித மனங்கள் பல இப்படித்தான் இயங்குமோ? எதையாவது அபூர்வம், அற்புதம், அதிசயம் என்று யாராவது சொன்னால்... அது கூடுதலாய் நம் கவனத்தை ஈர்க்கும். இல்லையேல், அவை வந்ததும் தெரியாது, போவதும் தெரியாது. வாழ்வில் இப்படி எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள், நம்மைச் சுற்றி, சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கின்றன. வேறு யாராவது வந்து ‘அதோ பாருங்கள்! அதிசயம்’ என்று சுட்டிக் காட்டும் வரைக் காத்திருக்காமல், நாமே அவைகளைத் தினமும் தேடி, கண்டு கொண்டால் வாழ்வே இன்னும் அற்புதமாக அமையும்.

இயேசுவின் புதுமைகளைப் பற்றி விவிலியத் தேடல்களில் நாம் சிந்தித்தபோது, நான் பகிர்ந்து கொண்ட ஓர் எண்ணத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். வாழ்வில் நம்மை வந்து சேரும் புதுமைகள் எல்லாம் எப்போதும் இடியாய், மின்னலாய் முழங்கிக் கொண்டு வருவதில்லை. இரவில் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, சப்தமின்றி இறங்கும் பனி, எப்படி அதிகாலைச் சூரிய ஒளியில் மின்னும் வைரமாய் அந்தப் புல் மீது அமர்ந்திருக்குமோ, அதேபோல், பல புதுமைகள் நம் வாழ்விலும் சந்தடியின்றி நுழைந்து மனதுக்குள் வைரங்களாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரங்களைக் கோர்த்து மாலையாக்குவதும், அல்லது, இவைகளைக் கண்டுகொள்ளாமல் எறிந்து விடுவதும் அவரவர் பொறுப்பு.
கடந்த எட்டு வாரங்களாய்த் திருப்பாடல் 23 ஐப் பற்றிப் பல சிந்தனைகளைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். இனியும் தொடர்வோம். இந்தப் பாடலின் வரிகள் பனியாய், மென்மையாய் இறங்கி நமது மனங்களில் வைரமாய் மின்னிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்கிறேன்.

இந்தியாவில் பஜனைப் பாடல்களும், நாமச் செபங்களும் நாம் பயன்படுத்தும் அழகான செப முறைகள். இறைவனின் பெயரை, அல்லது அவர் குறித்த ஒரு சிந்தனையைத் திரும்பத் திரும்பச் சொல்வது மிகவும் நன்மை பயக்கும் அழகான ஒரு தியான வழி. திருப்பாடல்களின் வரிகளை, அதுவும் திருப்பாடல் 23ன் வரிகளை இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்வது மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் திருப்பாடலின் முதல் வரியான “ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை” என்பதை கடந்த சில வாரங்கள் நீங்கள் சொல்லி வந்திருந்தால், அதே பழக்கத்தைத் தொடருங்கள். இன்று, நம் தேடலில் நாம் சிந்திக்கவிருப்பது இத்திருப்பாடலின் இரண்டாம் திருவசனம்: “பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.” இந்த வரியையும் அடிக்கடிச் சொல்லப் பழகுவோம்.
அப்படி நாம் இந்த வரியைச் சொல்வதற்கு உதவியாக, ஒரு சில சிந்தனைகளை இன்று கூற விழைகிறேன். ‘பசும்புல்’ என்ற அந்தச் சொல்லை மட்டும் நமது சிந்தனையின் முக்கிய கருவாக இன்று எடுத்துக் கொள்வோம்.

இறைவனின் படைப்புக்களில் மிக அழகான, பல கோடி மக்களின் கவனத்தை கவர்ந்த ஒரு படைப்பு... வானவில். நம்பிக்கையின் அடையாளம் என்று இந்த உலகமே கொண்டாடும் அந்த வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவை. கருநீலத்தில் ஆரம்பமாகும் இந்த வண்ணக் கலவை, இரத்தச் சிகப்பில் முடியும். இந்த வண்ணங்களில் கண்களுக்கு இதமான, நமக்குப் பெரிதும் சுகம் தரும் நிறங்கள் பசுமை, நீலம். இந்த இதமான வண்ணங்களை இறைவன் தன் படைப்பின் பெரும் பகுதிக்கு அளித்துள்ளார். நீல வானம், பசுமை பூமி. இந்த வானத்தையும், பூமியையும் நாம் படாத பாடு படுத்தினாலும், அவை இன்னும் தன் நீலத்தை, பசுமையை முழுவதும் இழக்கவில்லை. எனவே தான், அமைதியும் இதமான உணர்வுகளும் நம்மை நிறைக்க வேண்டுமென்று ஏங்கும் போதெல்லாம் இந்த நீல வானமும், பசுமையான புல் வெளிகளும் எங்குள்ளன என்று நாம் தேடி ஓடுகிறோம். இந்த இதமான உணர்வுகளை, அமைதியைத் தேடி எங்கும் போக வேண்டாம். நாம் இருக்கும் இடத்திலேயே இவைகளை உணர முடியும்.

நம்மில் பலர் தியானங்களில், யோகப் பயிற்சிகளில் சிறந்தவர்கள். உங்களுடன் நானும் ஒரு சிறு முயற்சியில் இன்று இறங்க நினைத்துள்ளேன். அடுத்த சில நிமிடங்களை நான் ஒரு ஆழ்நிலை தியானமாக, காட்சி தியானமாக அமைக்க முயல்கிறேன். எந்தச் சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், இந்த முயற்சியில் ஈடுபடலாம். இந்த வானொலி நிகழ்ச்சியைக் கேட்டபடியே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். கண்களை மூடி, உங்கள் சிந்தனைகளைச் சிறிது கட்டுப்படுத்தி, அமைதிப்படுத்தி, ஒருமுகப் படுத்துங்கள். ஒரு சில நிமிடங்கள் அழகானதொரு கற்பனைக் காட்சி உங்கள் மனக்கண் முன் விரியட்டும்...
நீண்டு, பரந்து, விரிந்திருக்கும் ஒரு புல்வெளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அழகான ஒரு மலைஅடிவாரத்தில், தெளிவாய் ஓடும் ஓர் ஓடையின் அருகில் பச்சைக் கம்பளமாய் விரிந்திருக்கும் அந்தப் புல்வெளியில் தென்றல் இதமாக வீசிக் கொண்டிருக்கிறது. அந்தத் தென்றல் அங்கு நன்கு வளர்ந்துள்ள எல்லாப் புல்லையும் தொட்டு விளையாடும் போது, அந்தப் புல்வெளியில் உருவாகும் அலைகளை... ஆம்... பசுமை அலைகளை மனக் கண்ணால் பாருங்கள். எந்த ஒரு தடையும் இல்லாமல், எல்லாப் பக்கமும் சுதந்திரமாய் வீசும் அந்தத் தென்றல், அந்த புல்வெளியின் மீது ஆடும் நடனங்கள், ஓடியாடும் விளையாட்டுகள், அதனால் அடர்ந்த அந்தப் புல்வெளியின் மீது உண்டாகும் பல வடிவங்கள் இவைகளை மனக்கண்ணால் பாருங்கள். அந்தப் புல்வெளியின் அழகை நீங்கள் ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு எழும் ஒரு புல்லாகுழல் இசையைக் கேளுங்கள்...
அந்தப் புல்வெளியின் ஒரு பகுதியில் ஓர் ஆயன் தன் ஆடுகள் மத்தியில் அமர்ந்து, தன்னை மறந்து வாசிக்கும் அந்தப் புல்லாங்குழல் இசை உங்களையும் மெய்மறக்கச் செய்யட்டும்.

ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.







All the contents on this site are copyrighted ©.