2010-08-24 16:38:04

அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இத்திங்களன்று அதிகாரப் பூர்வமாக ஆரம்பித்தன.


ஆகஸ்ட் 24, 2010. அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இத்திங்களன்று மேற்கு வங்காளத்தின் Baruipur பேராலயத்தில் அதிகாரப் பூர்வமாக ஆரம்பித்தன.

இக்கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்து மறையுரையாற்றிய Baruipur ஆயர் சல்வதோர் லோபோ, தினமும் திருப்பலி கண்டபின்னரே தன் பணிகளைத் துவக்கும் அன்னை தெரசாவின் வாழ்வில் திருப்பலி எத்தகைய மைய இடத்தைக்கொண்டிருந்தது என்பது குறித்து எடுத்துரைத்தார்.

மோதல்களாலும் வன்முறைகளாலும் துன்புறும் உலகில் வன்முறைகளை நிறுத்தி அமைதியை ஊக்குவிக்க அன்னை தெரசாவைப்போல் அமைதியின் தூதுவர்களாக ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் ஆயர்.

இதற்கிடையே, அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து ஆசியா நியூஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த இந்தியா வாழ் திபெத்தியர்களின் தலைவரான Samdhong Rinpoche, புத்த மதத்துறவிகளுக்கு, புத்தமதத்தலைவர் தலாய் லாமாவாலேயே ஓர் எடுத்துக்காட்டாய் முன்னிறுத்தப்படுபவர் அன்னை தெரசா என்றார். கணக்கிட முடியா கருணையின் மறுபிறப்பாக அன்னை தெரசாவை நோக்கும் திபெத்திய புத்த மதத்தினர், அன்னையின் வழிகளைப் பின்பற்றி அவரை ஒத்த மனிதாபிமானச் சேவைச் செய்ய வேண்டும் என ஏற்கனவே புத்தமதத்தலைவர் தலாய் லாமா விண்ணப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார் Rinpoche .








All the contents on this site are copyrighted ©.