2010-08-24 16:36:42

ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து நாடோடி இன மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீட அதிகாரி.


ஆகஸ்ட் 24, 2010. ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து ருமேனியாவைச் சேர்ந்த நாடோடி இன மக்களை மொத்தமாக வெளியேற்றும் ஃபிரான்ஸ் அரசின் திட்டம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் குடியேற்றதாரர்களுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகொஸ்தீனோ மர்கெத்தோ.

இம்மாத இறுதிக்குள் ஏறத்தாழ 850 நாடோடி இன மக்களை அவரவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் ஃப்ரான்ஸ் அரசின் திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட பேராயர் மர்க்கெத்தோ, இவ்வெளியேற்றம் தொடர்புடைய பிரச்னைகளை ஐரோப்பிய நாடுகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது என்றார்.

ஐரோப்பிய கண்டத்தில் 1கோடியே 20 இலட்சம் நாடோடி இன மக்கள் வாழ்வதாகவும் அதில் 50 இலட்சம் பேர் சிறார்கள் எனவும் உரைத்த பேராயர், அக்குழந்தைகளின் கல்வி குறித்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இம்மாத துவக்கத்தில் நாடோடி இன மக்களின் முறையற்ற 51 முகாம்கள் ஃபிரான்ஸ் அரசால் அகற்றப்பட்டது குறித்தும் எடுத்துரைத்த பேராயர் மர்க்கெத்தோ, தேசிய பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல் இல்லாத சூழல்களில் வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றுவது ஐரோப்பிய அரசியலமைப்பில் தடைச்செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.