2010-08-23 14:50:56

இஸ்ராயேல் பாலஸ்தீனியப்பேச்சுவார்த்தைகளுக்கென இரு முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார் யெருசலேம் ஆயர்.


ஆகஸ்ட் 23, 2010. செப்டம்பர் மாதம் முதல் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டில் இஸ்ரேயலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே இடம்பெற உள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள், எருசலேம் பகுதியைப் பகிர்வது மற்றும் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ராயேல் ராணுவம் வெளியேறுதல் என்ற இரு முக்கியக் கருத்துகளை மையம் கொண்டதாக இருக்கும் என்றார் எருசலேமின் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி.

ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ராயேல் ராணுவம் வெளியேற விருப்பம் இன்றி இருப்பதும், எருசலமின் பழைய நகரைப் பாலஸ்தீனியர்களுக்கு வழங்க மறுப்பதும் பிரச்னைகள் தொடர்வதற்குக் காரணமாக இருந்து வருகின்றன என்றார் ஆயர்.

உண்மையான அமைதியை நோக்கிய பாதையில், இஸ்ராயேல் மீது அமெரிக்க ஐக்கிய நாடு தங்கள் செல்வாக்கை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும் என்பதைப் பொறுத்து பிரச்னைகளுக்கானத் தீர்வு உள்ளது என்றார் எருசலேமின் லத்தீன் ரீதி துணை ஆயர் ஷொமாலி.

இஸ்ராயேலுக்கென்றும் பாலஸ்தீனியர்களுக்கென்றும் தனித்தனி நாடுகள் இருப்பதன் வழிதான் அமைதியைக் கொணரமுடியும் என்ற ஆயர், இதன் மூலம் கிறிஸ்தவர்கள் மத்தியக்கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதையும் பெருமளவில் தடுக்க முடியும் என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.