2010-08-23 15:37:16

ஆகஸ்ட் 24 நாளும் ஒரு நல்லெண்ணம்


விபாஸனா என்ற தியான முறையை முதல்தடவையாகச் செய்பவர்கள் முழுமையாக பத்து நாட்கள் செய்வார்கள். அதில் நான்காவது நாள் தியானப் பயிற்சியின் போது ஒரு காரியத்தைக் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் என்பார்கள். அது என்னவெனில், ஒருவர் தியானத்திற்கு உட்காருவதற்கு எந்த நிலையைத் தேர்ந்து கொள்கிறாரோ அதே நிலையில் ஒருமணி நேரம் அசையாமல் இருந்து தியானப் பயிற்சி செய்ய வேண்டும். அப்படி ஒருநாளில் குறைந்தது மூன்று தியான நேரங்களில் இருக்க வேண்டும் என்பார்கள். இதில் விடாமனஉறுதியை, வைராக்கியத்தை வலியுறுத்துவார்கள். இந்த வைராக்கியம், உறுதியான மனத்திடம், நமது வாழ்க்கையின் அழுக்குகளை அகற்றவும், இழுக்குகளைத் தவிர்க்கவும் அடித்தளமாக அமைகின்றது. இது நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும் தேவைப்படுகிறது. இரஷ்ய கம்யூனிச புரட்சியாளரான விளாடுமீர் லெனின் கல்லூரியில் கணிதத் தேர்வுக்குச் சென்ற அதற்கு முந்தைய நாள் மாலையில் அவருடைய சகோதரரைத் தூக்கிலிடப் போவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், அவர் கணிதத் தேர்வை எழுதினார். அதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றார். இந்தியத்தாய் வார்த்தெடுத்த பகத்சிங், கட்டபொம்மன் போன்ற எண்ணற்றத் வைரங்கள் வைராக்கியத்தால் ஒளிர்ந்தன.

இறையன்பு என்ற எழுத்தாளர் சொல்கிறார் – “இளமை என்பது வைராக்கியத்தின் விளைநிலம். அப்போது விதைக்கின்ற இலட்சியங்களே இறுதிவரை நம்மை உயர்ந்த சிந்தனைகளை நோக்கி இட்டுச்செல்லும். வைராக்கியத்துடன் வாழ்ந்தவர்களே, இன்று நாம் இருக்கும் உலகத்தின் தன்மையை மாற்றிக்காட்டியவர்கள்!” என்று.








All the contents on this site are copyrighted ©.