2010-08-23 15:40:53

அக்னிக்குள் அன்பு


ஆக.23,2010. விலைபோகும் மனிதம் என்ற நமது வாரம் ஓர் அலசலில் ஆப்கானிஸ்தானில் ஆயிஷாவுக்கும் மருத்துவ பிறரன்புப் பணியாளர்களுக்கும் தலிபான்கள் செய்த வன்செயல்கள் பற்றிப் பார்த்தோம். தலிபான்கள் போன்றவர்கள், அப்பாவிகளின் உடம்பில் ஏற்படுத்தும் காயங்கள் நமக்கு மனதில் மரணவலியை ஏற்படுத்துகின்றன. கடவுளே, இதுபோன்ற செய்திகள் நம் கண்ணில் இனிமேல் படவே கூடாது என்று நினைத்தால்கூட அவை சிலநாடுகளில் தவிர்க்க முடியாத செய்திகளாகி விடுகின்றன. சவுதி அரேபியாவில் இரண்டுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாக 22 வயதான அப்துல் அசிஸ் அல் மித்தைரி என்பவரின் முதுகில் ஒருவர் பெரிய கத்தியால் வெட்டியதில் அப்துல் தற்சமயம் உறுப்புக்கள் செயலிழந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டு இருக்கிறார். எனவே அந்தக் குற்றவாளியும் இதேமாதிரியாக ஆக்கப்படும் தண்டனையை வழங்க விரும்பிய நீதிபதி ஒருவர் உதவி கேட்டு மருத்துவமனைகளை நாடி இருக்கிறார். அந்தக் குற்றவாளி அப்துல்லின் தண்டுவடத்தில் எந்த இடத்தில் வெட்டினாரோ அதே இடத்தில் இவருக்கும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு மருத்துவமனை கூறியிருப்பதாக ஓகாஸ் என்ற சவுதி தினத்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் குற்றவாளிக்குத் தண்டுவடத்தில் சேதம் உண்டாக்கி உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்யும் தண்டனையா அல்லது சிறைத் தண்டனையா அல்லது இழப்பீட்டுத் தொகையா அல்லது சாட்டையடியா என்பதை நீதிமன்றம்தான் தீர்ப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் சர்வதேச மனித உரிமைகள் கழகம் இத்தகைய தண்டனை ஐ.நா.வின் சித்ரவதைக்கெதிரான ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும் என்று சொல்லி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய ஈரமற்ற நெஞ்சங்களுக்கு மத்தியில் ஓர் ஈர இதயம் பற்றி கடந்த வார நாளிதழ் ஒன்றில் வாசித்தோம்.

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் அஜீத்சிங். இவர் சில நாட்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். இவர் ஏறிய பேருந்து பாதி வழியில் பழுதடைந்துவிட, வேறு வழியில்லாமல் தனியார் ஜீப் ஒன்றில் ஏறியிருக்கிறார். சில பயணிகளுடன் சென்ற அந்த ஜீப், நிற்காமல் சென்றுகொண்டே இருக்க, 'ஏதோ தவறு நடக்கிறது' என்று உணர்ந்து அபயக்குரல் கொடுக்க முயன்ற அவரை, பயணிகள் போர்வையிலிருந்த கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் கரங்கள் அடக்கியுள்ளன. பிறகு, வேறு ஒரு கும்பலிடம் கை மாற்றிவிடப்பட்ட அஜீத்சிங், மற்றொரு ஜீப்பில் ஏற்றப்பட, அது இராஜஸ்தான் மாநில எல்லையைத் தாண்டி விரைந்திருக்கிறது. விடிந்தபோது, தான் இருப்பது சம்பல் பள்ளத்தாக்கு என்பதும், சம்பல் கொள்ளையர்களால் தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதும் அஜீத்சிங்குக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அஜீத்சிங்கின் அலைபேசி மூலமாகவே அவருடைய வீட்டுக்குப் போன் செய்த கொள்ளையர்கள், "உன் கணவனை ஓர் ஆள் கடத்தி வந்து, எங்களிடம் விற்றுவிட்டான். பத்து இலட்ச ரூபாய் தந்தால், உன் கணவன் கிடைப்பான். காவல்துறையிடமோ அல்லது வேறு யாரிடமோ இதைப்பற்றி சொன்னால் உன் கணவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதைக் கேட்டதுமே, செய்வதறியாது கண்ணீர் விட்டு அலறித் துடித்த அஜீத்சிங்கின் காதல் மனைவி குடியா, அதன் பிறகுதான் துணிச்சலான அந்த முடிவை எடுத்திருக்கிறார். வீட்டிலிருந்த பத்து பவுன் நகையுடன் கையிலிருந்த 43 ஆயிரம் ரூபாயையும் எடுத்துக் கொண்டு தனியாகவே அவர்கள் சொன்ன இடத்துக்குப் போயிருக்கிறார். அங்கே அவர்களுடைய வாகனத்தில் ஏறி, மனித நடமாட்டமே இல்லாத சாலைகள் வழியாக அந்த வாகனம் சென்று ஓரிடத்தில் நின்றிருக்கிறது. பின்னர் ஒரு பொட்டல் காட்டில் நான்கு மணி நேரம் நடந்து ஒரு பாழடைந்த கோயிலுக்குக் குடியாவைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்தக் "கோவிலில் எட்டுப் பேர் துப்பாக்கியுடன் நின்றதைக் கண்டு குடியா கதிகலங்கிப் போய்விட்டார். எனினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'என் கணவர் எங்கே?'என்று அவர்களிடம் கேட்க, அவரது கணவரைத் துப்பாக்கி முனையில் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் உடம்பே வெடித்துவிடும் போல கதறி அழுததாகக் குடியாச் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் நடந்ததை அஜீத்சிங் எவ்வாறு விவரித்தார் என்பதை நாம் வாசித்தவாறே சொல்கிறோம்.

இந்தக் கண்ணீர்தான் கொள்ளைக்கூட்ட தலைவன் பீமாவோட மனதைக் கலக்கிடுச்சு. அழுது அரற்றின குடியாவோடக் கோலத்தைப் பார்த்த பீமா, 'சகோதரி, அழாதே. உன் கணவரை ஒண்ணும் பண்ண மாட்டோம். முதல்ல இந்த தண்ணியக் குடி'னு சொல்ல, அவரோட வார்த்தையில கொஞ்சம் தெம்பான குடியா, 'எங்கிட்ட இருந்ததையெல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன். இதை வச்சுக்கிட்டு, என் கணவரை விட்டுடுங்க. நீங்க குடும்பத்தோட நல்லா வாழ்வீங்க'னு கண்ணீரும் கம்பலையுமா கெஞ்சி, தான் கொண்டு வந்திருந்த பணம், நகையை எடுத்து பீமாகிட்ட கொடுத்தா...".

இதற்குப் பின்னர் நடந்த அதிசயத்தைக் குடியா விவரித்ததையும் சொல்கிறோம்.

"தரையில அழுது புரண்டு கிடந்த எம்பக்கத்துல உட்கார்ந்த பீமா, என் கையை கரிசனத்தோட பிடிச்சு, 'சம்பல் காட்டுல ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள எங்களை மீறி ஆம்பளைங்களே வரப் பயப்படுவாங்க. இதுவரைக்கும் எந்தப் பொண்ணும் வந்ததில்ல. நாங்க கொள்ளைக்காரங்கன்னு தெரிஞ்சும், உன் கணவனை மீட்கறதுக்காக உயிரையும் துச்சமா மதிச்சு நீ வந்திருக்க. கணவன் மேல நீ வச்சுருக்கற பாசத்துக்கு முன்னால, எங்களோட அரக்கக் குணம் தூள்தூளாகிடுச்சு. உன்னோட உண்மையான கண்ணீருக்கு எங்களாலப் பதில் சொல்ல முடியல. இனி நீ எங்களோட சகோதரி. நீ கொண்டு வந்த பணம், நகையை எல்லாம் திருப்பி எடுத்துக்கோ'னு சொல்ல, சில நொடிகளுக்கு என்ன நடக்குதுனே புரியல எனக்கு"

என்று வியப்பில் ஆழ்ந்த குடியா, அடுத்துச் சொன்னதையும் கேளுங்கள்!

"தன்கிட்ட இருந்த ஒரு ஜோடி கம்மலை எடுத்துக் கொடுத்த பீமா, 'சகோதரி... உன் மொத்த நகையையும் கழட்டி மூட்டைக்கட்டிட்ட. உன் வெறும் காதைப் பார்க்க சகிக்கல. இதப் போட்டுக்கோ'னு சொன்ன பீமா, கையிலிருந்த 5100 ரூபாய் பணத்தை அள்ளிக் கொடுத்து, 'இது என் சகோதரிக்கு நான் கொடுக்கற அன்புப் பரிசு. மறுக்காம வாங்கிக்கோ'னு சொல்ல, பொலபொலனு ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பிச்சுடுச்சு எனக்கு. நான் நிதானிக்கறதுக்குள்ள என் கால்ல விழுந்த பீமா, என் பாதங்களத் தொட்டு வணங்கினார். நான் பதற, 'சந்தோஷமா உன் கணவரைக் கூட்டிட்டுப் போ'னு கண்கள்ல நீரோட சொல்லி வழி அனுப்பி வச்சார். எல்லாத்துக்கும் மேல, மறுநாள் போன் செய்து, நாங்க பத்திரமா வீடு திரும்பிட்டோமான்னு உறுதியும் செய்தார் பீமா.

அன்பு நேயர்களே, இவ்வளவு பாசமும் நேசமும் உள்ள இந்தப் பீமா எப்படி கொள்ளைக்கூட்டத் தலைவரானார் என்று சிந்திக்கிறீர்களா? கொள்ளைக்கூட்டம் என்றாலே கடின இதயம் கொண்டவர்கள். ஈவு இரக்கமின்றி கொலை செய்பவர்கள், ஆட்களைக் கடத்துபவர்கள், கொள்ளையடிப்பவர்கள் என்றுதான் தெரியும். ஆனால் இந்தப் பீமா தன்னிடம் இருந்த பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இவ்வளவுக்கும் இவரது தலைக்கு மூன்று மாநில காவல்துறை வைத்துள்ள விலை ஐம்பதாயிரம் என்று பத்திரிகையில் வாசித்தோம். இவர் 'சம்பல் கொள்ளைக்கூட்டத்தில் மூத்த தலைவர்களில் ஒருவர். ' சம்பல் பள்ளத்தாக்கு என்பது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. இது நீண்டகாலமாகவே கொள்ளைக்காரர்களின் பூமியாகத்தான் இருக்கிறது.

இந்தப் பீமாக்களை உருவாக்குகிறவர்கள் யார்? இந்த பீமா இந்நிலைக்கு ஆளானதற்கு ஓர் அரசியல்வாதியே காரணம் என்று குடியா சொல்லியிருக்கிறார். "ஓர் அரசியல்வாதி பீமாவோட நிலத்தை அபகரித்தது மட்டுமல்லாமல், அவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததால் அவர் இப்படி தடம் மாறிப் போய்விட்டார். அத்துடன் அரசு முயற்சி செய்தால் அவர்களை நல்வழிப்படுத்தி சமூக வாழ்க்கைக்கு மறுபடியும் கொண்டு வர முடியும். இனி என் பிரார்த்தனைகளில் அவர்களுடைய விடியலுக்கான வேண்டுகோளும் கட்டாயம் இருக்கும்!" என்கிறார் குடியா. பாமர மக்கள்மீது அபாண்டங்களைச் சுமத்தி அவர்களைப் பெருங் குற்றவாளிகளாக்கும் பெரும்புள்ளிகள் தங்களது குற்றங்களை உணர்ந்து திருந்தினால் கொள்ளைக் கூட்டத்திலும் வெள்ளை உள்ளம் இருப்பதை உணர முடியும். அக்னிக்குள் அன்பு பற்றி எரிவதைக் காண முடியும்.

சுவாங் ட்ஸூ என்பவரின் தோட்டத்தில் இருந்த ரோஜா பூத்துக் குலுங்கியது. திடீரென்று ஒருநாள் அது பூப்பதை நிறுத்திவிட்டது. கவலை கொண்ட அவர் அந்தச் செடி மீது அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினார். நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. எனவே இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அந்த ரோஜாச் செடி அவரிடம் ஐயா, தவறு என்னிடம் இல்லை. என்னைச் சுற்றியிருக்கும் மோசமான சூழல் காரணமாகவே என்னால் பூக்க முடியிவில்லை என்றது. இந்த மண்ணைப் பாருங்கள். இதில் சத்தே இல்லை. என்னைச் சுற்றியிருக்கும் பாறையைப் பாருங்கள். அதில் ஈரமே இல்லை என்று ஒவ்வொன்றாகக் குறை சொன்னது. உடனே சுவாங் ட்ஸூ அது சொன்ன அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்தார். அப்படியிருந்தும் அது பூக்கவில்லை. ஒருநாள் ரோஜாவிடம் அவர் சொன்னார் – சுற்றுச்சூழலில் எந்தத் தவறும் இல்லை. தவறு உன்னிடம்தான் இருக்கிறது. எனக்கு ஒரு சீடர் இருந்தார். அவர் வழக்காடுபவர். அவர் எப்போதும் பிறர்மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பார். அதனால் அவர் மாறவே இல்லை என்றார். அந்த ரோஜா அவரிடம், ஐயா, நான் உங்கள் சீடரைப் பின்பற்றியதால் இந்நிலைக்கு ஆளானேன் என்று வருந்தியது. மறுநாள் மீண்டும் பூத்துக் குலுங்கியது.

நம்மில் பெரும்பாலானோர் இந்த ரோஜாச் செடி போன்று பிறர் மீது குற்றம் சுமத்துபவர்களாகவே இருக்கிறோம். தன் நோயை அறியாதவன் மருந்து சாப்பிடமாட்டான். மருந்து சாப்பிடாதவனை நோய் சாப்பிட்டுவிடும். பிறர்மீது குற்றம் சுமத்துபவன் தன் குற்றத்தைக் காணமாட்டான். தன்குற்றம் காணாதவன் திருந்தமாட்டான் என்று ஒரு பெரியவர் சொல்கிறார். குற்றக் கும்பல்களின் தவறுகளுக்கு யார் காரணம் என அறிய முற்படுவோம். அவர்கள் நெஞ்சில் சுரக்கும் ஈரம் காயாமல் அவர்கள் வாழ்வதற்கு வழிஅமைப்போம்.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், சமாதானத்தை வலியுறுத்தியும் 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 14 ஆயிரத்து 500 கிலோ பூக்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய பூக்களத்தைத் தயாரித்துள்ளார்கள். எங்கும் சமாதானம் தழைக்கட்டும், வன்முறைகள் ஒழியட்டும்.








All the contents on this site are copyrighted ©.