2010-08-21 15:53:44

ஈராக்கிற்குத் தேவையானது அமைதியும் பாதுகாப்புமே - பாக்தாத் துணை ஆயர்


ஆக.21,2010. ஈராக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் தற்போது அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சூழலில் ஈராக்கிற்குத் தேவையானது அமைதியும் பாதுகாப்புமே என்று பாக்தாத் துணை ஆயர் Shlemon Warduni கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளின் கடைசிப்பிரிவு ஈராக்கை விட்டு வெளியேறியதை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஆயர் Warduni சட்டமும் அரசும் இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது மிகவும் கடினம் என்றார்.

வெளிநாட்டுப் படைகள் நாட்டைவிட்டு வெளியேறினால் தமக்குப் பின்னால் அமைதியையும் பாதுகாப்பையும் விட்டுச் செல்ல வேண்டியது அவற்றின் கடமை என்றுரைத்த ஈராக் ஆயர், தற்போது தாங்கள் போரின் எதிர்மறை விளைவுகளைக் காண முடிகின்றது என்றார்.

ஆழமான விசுவாசம் கொண்டிருக்கின்ற அனைவரும் தங்கள் மனசாட்சியுடன் ஒத்துழைத்து ஈராக்கில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்பட உதவ வேண்டுமெனவும் ஆயர் கேட்டுள்ளார்.

சுயநல இலாபங்களையோ அல்லது சுயநல விவகாரங்களையோ முன்னிறுத்தாமல் கடவுளை மட்டுமே மையப்படுத்தும் மனசாட்சியைக் கொண்டிருக்கும் நன்மனம் கொண்ட அனைவரிடமும் இவ்வாறு விண்ணப்பிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், 2011ஆம் ஆண்டு இறுதி வரை ஐம்பதாயிரம் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படை வீரர்கள் ஈராக்கில் இருந்து அந்நாட்டின் இராணுவத்திற்குப் பயிற்சிகள் அளிப்பதில் ஈடுபட்டிருப்பர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது








All the contents on this site are copyrighted ©.