2010-08-21 15:52:40

ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாடு : ஆகஸ்ட் - செப்டம்பர்


ஆக.21,2010. “இன்று ஆசியாவில் இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற தலைப்பில் திருப்பீட பொது நிலையினர் அவை தென் கொரியாவின் செயோலில் இம்மாதம் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர்க்கென நடத்தப்படும் இம்மாநாடு குறித்துக் கருத்து தெரிவித்த திருப்பீட பொது நிலையினர் அவை, வளமையான கலாச்சார மற்றும் சமயப் பாரம்பரியங்களைக் கொண்ட ஆசியா தற்போது உலக அளவில் மாபெரும் மாற்றத்தைக் கண்டுவருகின்றது எனவும், இத்தகைய கண்டத்தில் கத்தோலிக்கர் இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இம்மாநாடு நடத்தப்படுகின்றது என்று தெரிவித்தது.

கொரிய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இம்மாநாட்டில் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய கிறிஸ்தவச் சமூகங்கள், பொதுநிலையினர் கழகங்கள், திருச்சபை சார்ந்த இயக்கங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ நானூறு பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.