2010-08-20 12:38:56

ஆகஸ்ட் 21. நாளும் ஒரு நல்லெண்ணம்


சமூகத்தின் மனச்சான்று எங்கிருக்கிறது?

தீமைகள் இயல்பானவைகளாக ஏற்கப்படும் வேளைகளில் எழும் கேள்வி இது.

தண்ணீர் மூழ்கடிக்காது என்ற நம்பிக்கையில்தானே தாமரையும் பிறக்கிறது.

அந்த நம்பிக்கையை நம் குழந்தைகளுக்கு நாம் தந்திருக்கின்றோமா?

ஒரு கேள்வி.

குடும்பச் சுமையைத் தலையிலும் வாழ்க்கைச் சிலுவைகளைத் தோளிலும் சுமந்துகொண்டு, வலியில் நாட்களையும் கண்ணீரில் வாழ்க்கையையும் கரைத்து, அதிலேயே கரைந்து போகும் பாலர் பருவத்திற்குப் பொறுப்பேற்பது யார்?

மீட்டவும் இசைக்கவும் வேண்டிய இசைக்கருவிகளைப் பிழிந்தால் இசை கிட்டுமா?

விதைகளைத் திருடிவிட்டு வினைகளை விதைத்தால் தினை விளையுமா?

விழிகளைத் தோண்டி இமைகளை அழகுப்படுத்தலாமா?

இலைகளையும் கிளைகளையும் முறிக்க இருக்கும் உரிமை கொண்டு, வேர்களையும் எரிக்கலாமா?

பிஞ்சு விழிகளில் உறங்குகின்ற கனவுகளைக் கலைக்க நமக்கு உரிமை உள்ளதா?

பாலகர்கள் என்ன, பாதகர்கள் வளர படிக்கட்டுகளா? என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்?

கொடூரங்கள் கண்டு உணர்ச்சி வசப்படுகிறோம். ஆனால் அந்த உணர்ச்சிகளுக்குத் தொடர்ச்சி இல்லையே!

குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்க அலைகள் நம் மனக்கரையைத் தினமும் தொட்டுக்கொண்டே தான் இருக்கின்றன.

இவர்கள் படிக்க வழி செய்ய வேண்டும். அதற்கு முன் பெற்றவர்களின் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும். குழந்தைகள் வருமானம், பெற்றோருக்கு அவமானம்!

சட்டங்கள் இயற்றி என்ன பயன்? அதை அமுலாக்கும் திட்டம் இருக்கிறதா?

கடந்த கால வரலாறுகளைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை. திருத்தி அமைக்கத் தேவையில்லையாத ஒரு வரலாற்றை உருவாக்குவதே இன்றைய தேவை.

இல்லையெனில்,

விளையும் பயிர் முளையிலே கருகும்








All the contents on this site are copyrighted ©.