2010-08-19 14:59:59

இரத்த தானம், உடல் உறுப்புக்களின் தானம் இவற்றை வலியுறுத்தும் இயேசுசபைக் குரு ஜெரி ரொசாரியோ


ஆகஸ்ட் 19, 2010. இரத்த தானம், உடல் உறுப்புக்களின் தானம் இவற்றால் இந்த உலகில் இன்னும் அதிக மகிழ்வைக் கொண்டு வர முடியும் என்கிறார் தமிழ் நாட்டைச் சேர்ந்த இயேசுசபைக் குரு, ஜெரி ரொசாரியோ.
சமூக நல ஆர்வலரும், இறையியல் ஆசிரியருமான அருள்தந்தை ஜெரி ரொசாரியோ, இரத்த தானம், உடல் உறுப்புக்களின் தானம் இவைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் வளர்க்க, தானம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, பணி செய்து வருகிறார்.
தனது 19வது வயதிலிருந்து இரத்த தானம் செய்துவரும் அருள்தந்தை ஜெரி, இதுவரை 154 முறை இரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இரத்தம், உடல் உறுப்புகள் என்று ஒருவர் தன்னையே மற்றவருக்குப் பகிர்ந்தளிப்பதே மிக உயரிய பகிர்ந்தளிப்பு என்றும், இயேசுவும் இவ்வகையில் தன்னையே பகிர்ந்தளித்து, ஏழைகளை மேம்படுத்தினார் என்றும் அருள்தந்தை ஜெரி கூறினார்.
அருள்தந்தை உருவாக்கியுள்ள தானம் என்ற இந்த அமைப்பும், தமிழ் நாடு அரசின் AIDS நோய் கட்டுப்பாட்டுக் குழுவும் Tamil Nadu State AIDS Control Society [TANSACS] இணைந்து இவ்வெள்ளியன்று சென்னையில் மந்தவெளிக்கருகே உள்ள தியான ஆசிரமத்தில், இரத்த தானம், உடல் உறுப்புக்கள் தானம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.உறுப்புக்கள் தானம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் அதிகம் பரவவில்லை என்பதும், அதே வேளையில், இந்தியாவில் உள்ள ஏழைகள் பலர் தங்கள் வறுமையின் காரணமாக உறுப்புக்களை விற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.