2010-08-18 16:18:38

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஆகஸ்ட் 18, 2010. இவ்வாண்டின் தன் 27வது புதன் மறைபோதகத்தை, திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்க, அங்கு இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஏறத்தாழ 2000 திருப்பயணிகள் குழுமியிருந்தனர். இச்சனியன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் புனித பத்தாம் பத்திநாதர் குறித்து தன் சிந்தனைகளை பொது மறைபோதகத்தின்போது திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார் பாப்பிறை.

1835ம் ஆண்டு இத்தாலியின் ரியேசே எனுமிடத்தில் ஜுசெப்பே சார்த்தோ எனும் இயற்பெயருடன் பிறந்த திருத்தந்தை 10ம் பத்திநாதர், தன் 23ம் வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1884ல் மாந்தோவா ஆயராகவும் 1893ல் வெனிஸ் முதுபெரும் தலைவராகவும் நியமிக்கப்பட்ட இவர், 1903ல் திருத்தந்தையாக தேர்வுச் செய்யப்பட்டார்.கிறிஸ்துவிலேயே அனைத்தையும் புதுப்பித்தல் என்பதை தாரகமந்திரமாகக் கொண்டு, திருச்சபைக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொணர்ந்தவர் இத்திருத்தந்தை. திருத்தந்தை 10ம் பத்திநாதர் வெளியிட்ட திருச்சபைக் கோட்பாடுகள் அடங்கிய மறைக்கல்வி போதனையானது விசுவாச உண்மைக்கான தெளிவான, எளிமையான மற்றும் துல்லியமான வழிகாட்டியாக இருந்தது. திருவழிபாடுகளில், குறிப்பாக திருவழிபாட்டு இசையில் அவர் கொணர்ந்த மாற்றங்கள் குறிப்பிடும்படியானவை. முதலாம் உலகப்போரின் போது, சொந்த சகோதரர்களிடையே மோதல்களைக் கண்டு துயருறும் ஒரு நல்தந்தையைப்போல் தன் கவலையை வெளியிட்டு 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 2ந்தேதி கத்தோலிக்க உலகிற்கென விண்ணப்பம் ஒன்றை விடுத்தார். அதே மாதம் 20ந்தேதி அவர் உயிரிழந்தார். அவரின் புனிதத்துவப் புகழ் உலகெங்கும் பரவத்தொடங்கியது. புனித திருத்தந்தை 10ம் பத்திநாதரின் ஜெப உதவியுடன் நாம் கிறிஸ்துவின் அன்பிற்கு நம்மை திறந்தவர்களாகச் செயல்பட்டு, மற்றவர்களும் அவ்வன்பிற்கு தங்களைத் திறக்க உதவுவோமாக.

இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, பாகிஸ்தானின் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தன் அழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இவ்வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்காக இறைவனிடம் மன்றாடும் அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தன் ஆன்மீக அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார் பாபிறை. இம்மக்களுடன் ஆன நம் ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச சமூகங்களின் உறுதியான உதவிகளுக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.