2010-08-18 15:48:45

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பிரிட்டனுக்கானத் திருப்பயண நிகழ்வுகள்


ஆக.18,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற செப்டம்பர் 16 முதல் 19 வரை பிரிட்டனுக்கு மேற்கொள்ளவிருக்கும் அவரது திருப்பயண நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் 16 வியாழக்கிழமை உரோம் நேரம் காலை 8.10 மணிக்கு உரோம் Ciampino விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை உள்ளூர் நேரம் 10.30 மணிக்கு எடின்பர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைவார்.
விமானநிலைய வரவேற்புகள் முடிந்து எடின்பர்க் Holyroodhouse அரச மாளிகையில் அரசி இரண்டாம் எலிசபெத்தை மரியாதை நிமித்தம் சந்தித்தல், மாலையில் Glasgow, Bellahouston பூங்காவில் திருப்பலி நிகழ்த்துதல், பின்னர் இலண்டனுக்குப் புறப்படுதல் முதல் நாள் திருப்பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளில் Twickenham புனித மரியன்னைப் பல்கலைகழகத்தில் கத்தோலிக்கக் கல்வியாளர்களைச் சந்தித்தல், பிறசமயப் பிரதிநிதிகளைச் சந்தித்தல், மாலையில் லாம்பெத் மாளிகையில் கான்ட்டர்பரி ஆங்லிக்கன் பேராயரைச் சந்தித்தல், Westminster ஆலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டில் கலந்து கொள்ளல் ஆகியவை திருப்பயணத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது நாளில் Westminster பேராயர் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர், உதவிப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்திக்கும் திருத்தந்தை, இறையடியார் ஜான் ஹென்றி நியுமென்னுக்காக நடைபெறும் திருவிழிப்புத் திருவழிபாட்டில் கலந்து கொள்வார்.
நான்காவது நாள் ஞாயிறன்று Birmingham செல்லும் திருத்தந்தை, Rednal Cofton பூங்காவில் இறையடியார் ஜான் ஹென்றி நியுமென்னை முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கும் திருப்பலியை நிகழ்த்துவார். இத்திருப்பயணத்திற்கு முத்தாய்ப்பாக விளங்கும் இத்திருப்பலியை நிகழ்த்தி அன்று மாலையில் பிரிட்டன் ஆயர்களைச் சந்தித்து உரை வழங்கிய பின்னர் உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.