2010-08-18 15:49:46

இந்தியாவில் சமூக நீதி ஆர்வலர்கள் இணைந்து புது டில்லியில் நடத்தும் மக்கள் நீதிமன்றம்


ஆக.18,2010 இந்தியாவில் சமூக நீதி ஆர்வலர்களின் பல குழுக்கள் இணைந்து ஆகஸ்ட் 22 முதல் 24 வரை புது டில்லியில் அனைத்திந்திய மக்கள் நீதிமன்றம் (National People’s Tribunal) ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.
நாட்டின் ஒருமைப்பாடு அமைப்பு (National Solidarity Forum) என்ற அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் ஒரிசாவின் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு ஆளானவர்களின் முறையீடுகள் சமர்ப்பிக்கப்படும்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி லக்ஷ்மனானந்த சரஸ்வதி என்ற இந்துமதத் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லி, ஏழு வாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் பல நடந்தன.
இந்த வன்முறைகளில் 93 பேர் கொல்லப்பட்டனர், 50,000 பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர், மேலும் பல கிறிஸ்தவ ஆலயங்களும், நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் ஈடுபட்ட வெகு சிலரே இதுவரை நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.ஆகஸ்ட் 22 முதல் மூன்று நாட்கள் புது டில்லியில் நடைபெறும் மக்கள் நீதி மன்றத்தில் கலந்து கொள்ள கந்தமால் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 50 பேர் உட்பட, பல்வேறு ஆய்வாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், தொடர்பு சாதன ஈடுபாடுள்ளவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர் என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.