2010-08-18 16:20:28

ஆகஸ்ட் 19 – நாளும் ஒரு நல்லெண்ணம்


இந்த உலகமும், இந்த உறவுகளும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என மனம் குறைபடுவதுண்டு.

இவ்வுலகை, உறவுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டோமா என்பதை ஏனோ கேட்கத் தவறி விடுகிறோம்.

நாம் முதலிலேயே சரியாகப் புரிந்திருந்தால் இந்த குற்றச்சாட்டிற்குத் தேவையே இருந்திருக்காது. நாம் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறி, அதனால் ஏற்பட்ட இழப்பை, உலகின் மீது, உறவுகளின் மீது பழியாகச் சுமத்துவது நியாயமா?

ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல் இல்லாத எந்த ஒரு விடயமும் கடைசி வரை விவாதப்பொருளாகத்தான் நீடிக்கும் என்பது அனுபவம்.

நேற்றும் இன்றும் நாம் காணும் மாற்றங்கள் தான் நம் இந்த புரிந்துகொள்ளுதலையும் பாதித்திருக்கின்றது.

எதை இழந்து எதைப் பெறுகிறோம் என்பது தெரிந்தால், யார் யாரைப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகிவிடும்.

வாழ்வின் முறைகளையும் பிழைப்புக்காக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைக்காகத்தான் வேலையே என்ற நிலை போய் வேலைக்காக வாழ்க்கை என்று மாறிவிட்டோம் நாமும்.

உறவுகளை மனதில் நினைத்துக்கொண்டு, வெளியே அவைகளைத் தொலைதூரமாக்கியது தான் இன்றைய வாழ்க்கை.

வேலை என்று உறவுகளைத் தொலைத்து உணர்வுகளைக் கனவினில் வளர்க்கிறோம்.

அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டே, அதனோடு உலகையும் உறவுகளையும் கட்டி இழுத்துச் செல்லப் பார்க்கின்றோம், உலகுக்கென்று தனி வேகமும், உறவுகளுக்கென்று தனி உலகமும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே.

இப்போது சொல்லுங்கள். உலகமும் உறவுகளும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையா?

உண்மையை ஆராய, கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்.








All the contents on this site are copyrighted ©.