2010-08-17 16:18:29

விவிலியத் தேடல்


RealAudioMP3
‘Inspiring Ballet – Hand in Hand’ ‘மனதை மேல் எழுப்பும் நடனம் - கையோடு கை’ என்று இணையதளத்தில் YouTube வழங்கும் ஒரு வீடியோப் பதிவை இரு நாட்களுக்கு முன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்செயலாக கிடைத்த அந்த வாய்ப்பை, எனக்குக் கிடைத்த ஒரு பேறு, ஓர் அருள் என்றுதான் நான் சொல்வேன். அந்த வீடியோ பதிவின் தலைப்புச் சொல்வது போல், அந்த ஐந்து நிமிட வீடியோ உண்மையில் நமது மனதை உயர்த்தும், மனதை மேல் எழுப்பும் சக்தி வாய்ந்தது.... இந்தத் தலைப்பிற்குப் பின் வரும் அடைப்புக் குறிக்குள் (It will make you cry) ‘இது உங்களை அழவைக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதுவும் உண்மைதான். என்னை அந்த வீடியோ, ஐந்து நிமிடங்களில் மூன்று முறை அழவைத்தது. இதேபோல் மற்றொரு வீடியோவில் இந்திய நாட்டின் கம்லேஷ் படேல் என்பவரைப் பார்த்தேன். அப்போதும், தொண்டை அடைத்தது. கண்கள் ஈரமாயின.

இவ்வளவு தூரம் இந்த வீடியோக்களைப் பற்றிச் சொல்வதற்கும், நாம் சிந்தித்து வரும் திருப்பாடல் 23ன் முதல் வரிகளுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது, அன்பர்களே.
Inspiring Ballet என்ற அந்த வீடியோ காட்டும் 5 நிமிட நிகழ்ச்சி மூன்று ஆண்டுகளுக்கு முன் CCTV 9 என்ற சீன தொலைக் காட்சியில் காட்டப்பட்ட ஒரு நிகழ்ச்சி. ஓர் இளம் பெண்ணும், இளைஞனும் இணைந்து ஆடும் நடனம் அது. சாதாரண நடனம் இல்லை அன்பர்களே. Ma Li என்ற அந்த இளம் பெண்ணுக்கு ஒரு கை இல்லை. Zhai Xiaowei என்ற அந்த இளைஞனுக்கு ஒரு கால் இல்லை. அவர்கள் இருவரும் இணைந்து ஆடும் போது, அவர்களுக்கு கை, கால் இல்லை என்ற குறைகளை மறக்க வைக்கும் வண்ணம் அவ்வளவு சிறப்பாக இருந்தது அந்த நடனம். 7000 பேர் கலந்து கொண்ட ஒரு நடனப் போட்டியில் இவர்கள் இருவரும் இரண்டாவது பரிசு பெற்றனர். இவர்கள் இருவரைத் தவிர, மற்ற போட்டியாளர்கள் எல்லாரும் உடல் அளவில் எந்தக் குறையும் இல்லாதவர்கள்.
அதேபோல், கம்லேஷ் படேல் என்ற அந்த இளைஞன் தன் இரு கைகளால் ஆடும் திறமையால் இந்தியாவிலும், உலக அரங்கத்திலும் புகழ் பெற்றுள்ளார். பல போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். Guy without legs wins national dance competition – amazing என்று YouTube ல் காணப்படும் மற்றொரு வீடியோ இது.
இந்த வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் ஏங்குகிறது. வாய்ப்பு உள்ளவர்கள், தவறாமல் நேரம் ஒதுக்கி, இந்த இரு வீடியோக்களையும் பாருங்கள். அந்த வீடியோ பதிவுகளின் ஒரு சில மணித்துளிகளையாவது ஒலி வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆண்டவர் என் ஆயன். எனக்கேதும் குறையில்லை. என்று நாம் சொல்லும் 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளின் விளக்கத்தை வீடியோ வடிவில் அமைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இரு வீடியோக்களும் எடுத்துக்காட்டுகள். Ma Li, Zhai Xiaowei, கம்லேஷ் படேல் என்ற இந்த மூன்று இளையோரின் நடனங்கள் உலகத்தில் குறைகளே இல்லை என்பதை இன்னும் ஆழமாய் நம்மை நம்ப வைக்கின்றன. இந்த மூன்று இளையோரின் நடனம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்களது பின்னணி நமக்குப் பாடமாகிறது.
Ma Liயின் அழகு, நடனத் திறமை இரண்டும் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்த அந்த வேளையில், அவரது 19வது வயதில், ஒரு கார் விபத்தில் வலது கையை இழந்தார். அவரது காதலன் அவரை விட்டு விலகினார். மனமுடைந்த Ma Li தற்கொலை முயற்சியில் இறங்கினார். பெற்றோரால் காப்பாற்றப் பட்டு, இப்போது தன் வாழ்வை மீண்டும் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், தன்னை மட்டும் புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்லாமல், தன்னைப் போல் வாழ்வில் பிடிப்பில்லாமல் போயிருக்கும் பலருக்கு தன் நடனங்களின் மூலம் மீண்டும் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் நடனமாடும் Zhai Xiaowei என்ற இளைஞனுக்கு இப்போது வயது 21. அவன் நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது, டிராக்டரிலிருந்து விழுந்து, தன் இடது காலை இழக்க வேண்டியிருந்தது.
குஜராத்தில் பிறந்து, ‘பரோடாவின் பெருமை’ என்று அழைக்கப்படும் கம்லேஷ், ஐந்து வயது சிறுவனாய் இருந்தபோது, காய்ச்சல் வந்தது. அவனது தந்தை மருத்துவமனைக்கு கம்லேஷை அழைத்துச் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்து, தவறான வழியில் குத்தப்பட்ட ஊசி இவைகள் எல்லாம் சேர்ந்து கம்லேஷின் இடுப்புக்குக் கீழ் உணர்விழந்து வாழ வைத்து விட்டன. அவன் இரு கால்களும் வலுவிழந்து, செயலிழந்து உள்ளன. 25 வயதைத் தாண்டிய கம்லேஷ் இப்போது தன் கைகளையே கால்களாக்கி ஆடும் திறமையால் உலகமே அவரை வியந்து பாராட்டுகிறது.

இந்த மூவரின் நடனத் திறமையைக் கண்டு வியக்கும் நாம், இவர்கள் தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டிகளைக் கேட்டு இன்னும் வியக்கிறோம், பாடங்களைப் படிக்கிறோம். கம்லேஷ் சொல்லும் அழகான எண்ணங்கள் இவை:
"உடலில் குறையுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை நான் உடல் குறையுடன் இருந்து சொல்ல வேண்டும் என்பதைக் கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். மன உறுதிக்கும், விடா முயற்சிக்கும் முன் உடல் குறைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான் நான் உலகிற்கு, முக்கியமாக, இந்தியாவுக்குத் தரக் கூடிய நல்ல செய்தி... நடனம் ஆட, இரு கால்கள் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கோ, நடனம் ஆட கால்கள் இல்லை. கடவுள் நம்பிக்கை இருக்கிறது."

4 வயது சிறுவனாய் டிராக்டரிலிருந்து விழுந்த Zhaiன் வாழ்வில் நடந்ததாய் சொல்லப்படும் நிகழ்ச்சி இது. சிறுவன் கீழே விழுந்த அந்த விபத்துக்குப் பின், அவனது காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னதை Zhaiன் தந்தை சிறுவனிடம் சொல்ல முயன்றார். அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. "நீ வாழ்க்கையில் இனி பல சவால்களை, கடினமானச் சூழல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்." என்று தந்தை சொன்னபோது, சிறுவன் Zhai "சவால்னா என்னப்பா? இனிப்பான மிட்டாயா?" என்று கேட்டானாம். பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, "ஆம், மகனே. சவால்கள் நீ விரும்பி சாப்பிடும் மிட்டாய் போலவே இனிக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக நீ சாப்பிட வேண்டும்." என்று தந்தை பதில் சொன்னாராம். இப்படி சொன்ன தந்தையால் கண்ணீரை அடக்க முடியவில்லை. எனவே தன் மகனுக்கு முன் அழக்கூடாதென்று, வெளியில் சென்று அழுதாராம்.
அத்தனை உள்ள வேதனைகள் மத்தியிலும் தந்தை சொன்ன அந்த அற்புத சொற்கள் Zhai மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்க வேண்டும். வாழ்வில் வந்த எல்லா சவால்களையும் மிட்டாயாக அவன் பார்க்கப் பழகியதால், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீச்சல் என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளைக் காட்டினான். அந்த நேரத்தில், அவன் கை இழந்த Ma Liயைச் சந்தித்தான். நடனத்திலும் சிறந்து விளங்க பயிற்சிகள் மேற்கொண்டான்.

கழி கொண்டு உயரம் தாண்டும் Pole Vault போட்டியில் உலகச் சாதனை படைத்த Brian Strenberg என்ற இளைஞன் 20 வயதில் சந்தித்த விபத்துக்குப் பின் 46 ஆண்டுகள் சக்கர நாற்காலியில் இன்றும் சாதனைகள் செய்து வருகிறார் என்று சென்ற வாரம் சிந்தித்தோம். இன்றையச் சிந்தனையில் Ma Li, Zhai Xiaowei, கம்லேஷ் படேல், என்ற இளைய சாதனையாளர்களைப் பற்றி சிந்திக்கிறோம். இவர்களைப் போல் உலகில் உடல் குறைகள் இருந்தும் சாதனைகள் படைத்த பல மேதைகளைப் பற்றி நமக்குத் தெரியும். Helen Kellerன் (1880 – 1968) சாதனைகள் கடந்த நூற்றாண்டின் காவியம். Ludwig van Beethovan (1770 - 1827) என்ற இசைமேதை கேட்கும் திறனை முற்றிலும் இழந்த பின்னும் அறுபுதமான இசையை உருவாக்கினார். John Milton (1608 – 1674) என்ற கவிஞர், பார்வை இழந்த பின்னும் காவியங்களை உருவாக்கினார். இந்த சாதனை வரலாறு தொடரும். தனக்கு இருப்பது குறையில்லை என்று தீர்மானிக்கும் உள்ளங்கள் இருக்கும் வரை, இந்த சாதனை வரலாறு தொடரும்.

ஆறில் சாகலாம், நூறில் சாகலாம், ஆனால், இளைமையில் சாவது கொடுமை என்பது பழமொழி. இளமையில் தினம் தினம் சாவது மிகவும் கொடுமை. சாதிக்கத் துடிக்கும் அந்த வயதில், கூடவே ஒரு குறையையும் உடலில் சுமந்துச் செல்வது மிக, மிகக் கடினம். உடல் குறையால் தினமும் செத்துப் பிழைக்கும் பல ஆயிரம் இளையோர், தங்கள் குறைகளை வென்று, இந்த உலகையும் வென்ற சாதனைகள் உண்மையில் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்தச் சாதனையாளர்கள் மேடை ஏறி, பிரமிப்பூட்டும் செயல்களைச் செய்யும் போது, மக்களின் ஆரவாரம், கைதட்டல் இவைகளைப் பெறுகிறார்கள். அந்த நேரத்தில், அவர்களது குறைகள் அவர்கள் உடலிலிருந்து, அவர்கள் உலகிலிருந்து விடைபெற்றுப் போய்விடும். அந்தக் குறைகளே வெற்றி மாலைகளைக் கொண்டு வரும். ஆனால், மேடையை விட்டு இறங்கி, மீதி நேரங்களைக் கழிக்கும் போது, அந்தக் குறைகள் மீண்டும் பாரமாய் அவர்கள் மனங்களில் ஏறி அமரக்கூடும். நாம் இன்று சந்தித்த இந்த இளையோர் வித்தியாசமானவர்கள்.
மேடையில் அவர்கள் நிகழ்த்தும் அந்த ஓரிரு மணி நேர நிகழ்வுகளுக்கு எட்டு, பத்து ... இல்லை, இல்லை, 18 20 மணி நேரங்கள் பயிற்சியில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்று கேள்விப் படுகிறோம். Ma Li, Zhai இருவரும் ஆடும் Inspiring Ballet என்ற அந்த நடனத்தின் ஒரு பகுதியில், தலைக்கு மேல் Ma Liயைத் தூக்கிப் பிடிக்கும் Zhai, அப்படியே Ma Liயைத் தன் உடலில் உருளவைத்து, கீழே கொண்டுவர வேண்டும். ஓரிரு நொடிகளில் இந்த செயல் நடக்கும். அந்த ஒரு பகுதியில் மட்டும், நடன ஒத்திகை நேரத்தில் Zhai அந்தப் பெண்ணைக் கீழே பல நூறு முறைகள் தவற விட்டதாகச் சொல்லப்படுகிறது. எங்கிருந்து வருகிறது இந்த விடா முயற்சி?

நாம் இதுவரை சந்தித்த, சிந்தித்த சாதனையாளர்கள் எல்லாருக்கும் அடிப்படையில் இருக்கும் ஒரு பொதுவான குணம்... நம்பிக்கை. கடவுள் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, அதன் விளைவாக, தங்கள் மீது அவர்கள் வளர்த்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை.
இந்த நம்பிக்கை இவர்களது கண்ணோட்டத்தைப் பெருமளவு மாற்றியுள்ளது. தங்களிடம் இருப்பது குறைகள் அல்ல, நிறைகள், திறமைகள் என்று பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

கம்லேஷ் ஆடிய அந்த நடனத்தில் என்னை அதிகம் பாதித்தது என்ன தெரியுமா? அவர் தன் செயலிழந்த, வளர்ச்சி அடையாத கால்களைப் பயன்படுத்திய விதம். தன் கைகளின் வலிமையால் நடனம் ஆடும் கம்லேஷ், துவண்டு போய் துணிபோல் கிடக்கும் தன் கால்களைத் தன் தோள் மீது சுற்றிப் போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார்.
இந்தியாவில் தோளைச் சுற்றித் துண்டு போடும் பழக்கம் உள்ளது. ஒருவரது பெருமையை, அந்தஸ்தை நிலை நாட்டும் பழக்கம் அது. நம் அரசியல் வாதிகள் இந்தப் பழக்கத்தை வித்தியாசமாகப் பயன்படுத்தி, இந்தப் பழக்கத்தையே கேலிக்குரியதாய் மாற்றி விட்டதை இப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், இந்தப் பழக்கம் மரியாதையை வலியுறுத்தும் ஒரு பழக்கம்.
கம்லேஷ் தோளைச் சுற்றி தன் கால்களைப் போட்டுக்கொள்ளும்போது, தன்னிடம் குறையென்று பிறர் கருதும் அந்தக் கால்களே தன் பெருமையை, மரியாதையை உலகறியச் செய்யும் அடையாளம் என்று அவர் சொல்வது போல் இருந்தது.

உடலில் குறையுள்ள அங்கங்களை மக்கள் முன் காட்டி மக்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து, தர்மம் கேட்கும் பல கோடி மக்களைத் தினமும் சந்திக்கிறோம். நாம் குறைகள் என்று கருதுவதை Ma Li, Zhai Xiaowei, கம்லேஷ் படேல் இவர்களும் மக்கள் முன், அதுவும் மேடையேறி காட்டுகின்றனர். ஆனால், அவைகளைக் குறைகள் என்று காட்டவில்லை. நமது பரிதாபத்தைப் பெறுவதற்காகக் காட்டவில்லை. அந்தக் குறைகளே தங்கள் நிறைகள், மாற்றுத் திறமைகள், தங்களது வெற்றியின் படிகற்கள் என்று உலகறியச் செய்துள்ளனர்.குறைகளை இப்படியும் பார்க்கும் உன்னத மனிதர்கள் உள்ளவரை, "ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை" என்ற வரிகள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.







All the contents on this site are copyrighted ©.