2010-08-17 16:18:03

ஆகஸ்ட், 18நாளுமொரு நல்லெண்ணம்


சுயிவோ (Suiwo) என்ற புகழ்பெற்ற சென் குருவிடம், மாணவர் ஒருவர் வந்தார். தான் அறிவொளி பெற உதவ வேண்டுமென அவர் குருவிடம் கேட்டார். குரு அவரிடம், "ஒரு கை எழுப்பும் ஓசையைக் கேட்டுவிட்டு வா. நம் பாடங்களைத் தொடர்வோம்." என்று முதல் பயிற்சியைக் கொடுத்தார். அவர் குருவோடு தங்கி, ஒரு கை எழுப்பும் ஓசையைக் கேட்கும் முயற்சியில் இறங்கினார்.
மூன்று ஆண்டுகள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர், எந்த வகையிலும் வெற்றி பெற முடியவில்லை. ஓர் இரவு குருவிடம் அவர் கண்ணீரோடு வந்தார். "குருவே, மூன்றாண்டுகள் ஆகியும், இந்த முதல் பயிற்சியிலேயே என்னால் வெற்றி காண முடியவில்லை. நான் மீண்டும் என் ஊருக்கு அவமானத்தோடு திரும்பிப் போக வேண்டும்." என்றார்.
குரு அவரிடம் இன்னும் ஒரு வாரம் தங்கி முயன்று பார்க்கச் சொன்னார். மாணவர் முயன்றார். வெற்றி பெறவில்லை. "மீண்டும் ஒரு வாரம் உன் சக்தியை எல்லாம் திரட்டி, முயற்சி செய்." என்றார் குரு. எந்தப் பயனும் இல்லை.
தனக்குக் கொடுத்த நேரம் எல்லாம் போதும். தன்னை ஊருக்கு அனுப்பிவிட்டால் போதும் என்று மாணவர் குருவைக் கெஞ்சினார்.
"சரி. உனக்கு இறுதி மூன்று நாட்கள் தருகிறேன். இம்முறையும் நீ வெற்றி பெறவில்லை எனில், உன்னையே நீ கொன்று விடுவது மேல்." என்று குரு சொன்னார்.
இம்முறை, இரண்டாம் நாள் மாணவர் அறிவொளி பெற்றார்.
 வாழ்வில் நெருக்கடிகள், சவால்கள், பிரச்சனைகள், எதிர்ப்புகள் இவை மலைபோல் குவிந்து, நம்மைப் புதைக்கப் போகும் நேரத்தில், உயிர்ப்புகள் உருவாகும்.







All the contents on this site are copyrighted ©.