2010-08-16 16:16:06

பொங்கி வெடிக்கும் இயற்கை


ஆக.16,2010. இந்தியாவின் 63வது சுதந்திர தின விழா இஞ்ஞாயிறன்று நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உரோமையிலும் இந்திய தூதரகத்தில் சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் அவர்கள் இந்திய குடிமக்களுக்கென வழங்கிய செய்தி வாசிக்கப்பட்டது. அச்செய்தியில் இடம் பெற்றிருந்த பல கருத்துக்களில், இந்தியாவின் பழம்பெருமை மிக்கச் சமயப் பாரம்பரியங்களை குடிமக்கள் எல்லாரும் கட்டிக்காக்க வேண்டுமென்பது ஓர் அழைப்பாக இருந்தது. பக்தியும் பாரம்பரியமும் மிகுந்த இந்திய வேதங்களில் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதத்தில் அதிகாலையிலிருந்து தூங்கும்வரை சொல்லவேண்டிய சில ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அதிகாலையில் தூங்கி எழுந்து பூமியில் பாதங்களை வைப்பதற்குமுன், ஓ! பூமா தேவியே, நீ பெருங்கடல்களை ஆடையாகவும் மலைகளை உடம்பாகவும் கொண்டுள்ளாய். நான் உன்னை வணங்குகிறேன். உன்னை என்னுடைய காலால் மிதிப்பதற்கு என்னை மன்னித்துவிடு என்று சொல்ல வேண்டும். குளிப்பதற்குமுன், கங்கை யமுனை கோதாவரி சரஸ்வதி நர்மதை சிந்து காவேரி ஆகிய நதிகளே! நீங்கள் எல்லாரும் நான் குளிக்கும் நீரில் எழுந்தருள் புரியுங்கள் என்று எண்ண வேண்டும். உணவு உட்கொள்ளும் முன், ஓ! அன்னபூரணியே, ஞானமும் வைராக்கியமும் எனக்கு ஏற்பட பிச்சை அளிப்பாய் தாயே என்று துதிக்க வேண்டும்.

இவ்வாறு நம் எண்ணமும் பிரம்மம், நீரும் புனிதம், காற்றும் கடவுள், மண்ணும் மாதா, மரமும் வரம் என்று எண்ணி ஒவ்வொரு நாளையும் விழிப்புணர்வுடன் செலவழிக்க வேண்டும் என்று இந்திய மதங்கள் சொல்கின்றன. இயற்கையோடு இயைந்து இயற்கையின் ஐம்பெரும் சக்திகளை வணங்கிய வாழ்க்கையை வாழ்வதற்கு உலகின் பல பகுதிகளில் மக்கள் பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்நாட்களில் ஒவ்வொரு நாளும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் பொங்கி வெடிக்கும் இயற்கை, மக்களின் இயற்கைமீதான பக்தியை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறதோ என்று கவலைப்பட வைக்கிறது. கடந்த வாரத்தின் இயற்கைப் பேரிடர் பாதிப்புகளில் ஒருசிலவற்றை மட்டும் நோக்கினாலே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானில் கடந்த பல வாரங்களாகப் பெய்து வரும் கனத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது கடுமையாக உள்ளது. இச்சனிக்கிழமையன்று அந்நாட்டிற்குச் சென்ற ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், வெள்ளத்தின் பாதிப்பைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இங்கு போல் வேறு எங்கும் தான் பார்க்கவில்லை, நாட்டின் பத்தில் ஒரு பகுதி மக்கள் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மக்களுக்கு உலக சமுதாயத்தின் உடனடி உதவிகள் தேவை என்று வலியுறுத்தினார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் நீண்ட காலமாக நிலவி வந்த கடும் பஞ்சத்திற்குப் பின்னர் கடந்த வாரத்தில் பெய்த கனத்த மழையால் 67,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். நைஜர் நதி கடந்த எண்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்போது அதிகமான அளவை எட்டியுள்ளது. நைஜர் நாடு தனது வரலாற்றில் மிகக் கடுமையான பசிக்கொடுமையையும் தற்போது எதிர் கொள்கிறது. நாட்டின் ஏறத்தாழ பாதிப்பேர் அதாவது 73 இலட்சம் பேர் கடும் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா.வின் உணவு திட்ட அமைப்பான WFP அறிவித்துள்ளது.

வடஅமெரிக்க நாடான கிரீன்லாந்தின் பெரும்பகுதி பனிக்கட்டிகளால் சூழ்ந்தது. தற்போது அந்நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள பீட்டர்மான் என்ற பனிப்பாறை உடைந்து, அதிலிருந்து பிரிந்த அந்த இராட்சத பாறை உருகத் தொடங்கியுள்ளது. நூறு சதுர மைல் பரப்பளவு கொண்ட இது ஒரு குட்டிப் பனித்தீவு போன்று காட்சியளிக்கிறது. இதிலிருந்து உருகி ஓடி வரும் தண்ணீரினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இயற்கையின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக அக்னியை வணங்கி அதைப் போற்றிப் பாடிய நாம் அவ்வப்போது அதன் கோரத் தாண்டவத்தையும் கண்டு வருகிறோம். வார்த்தைகளில் பூத்தூவிய வசந்தகாலங்கள் இன்று பல இடங்களில் குருதி கொப்பளிக்கும் கோடையாகியிருக்கின்றன. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பாகத்தில் பரவி வரும் கட்டுக்கடங்காதக் காட்டுத் தீயால் தேசிய பூங்காக்களின் பெரும்பாலான பகுதிகளும் நூற்றுக்கணக்கான வீடுகளும் அழிந்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. உலகிற்கே மழைதரும் அமேசான் பருவமழைக் காடுகளின் பெரும் பகுதி பிரேசில் நாட்டில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மரங்கள் மனிதனுக்கு சுவாசிக்கக் காற்றும் பசிக்கு உணவும் வெயிலில் இளைப்பாற நிழலும் தாகத்திற்குத் தண்ணீரும் உடுத்தும் ஆடைக்கு நூலும் குடியிருக்க வீடும் நோய்க்கும் மருந்தும் வணங்கும் தெய்வத்திற்குக் கோவில் கட்ட மரமும் பூஜைக்குப் பூவும் தந்து உதவுகின்றன.

கடந்த ஜூலை மாத இறுதியில் இரஷ்யாவின் வடக்குப் பகுதியில் புதர்களும், புதர்களையொட்டிய காடுகளும் எரியத் தொடங்கின. இந்தக் காட்டுத் தீயின் வீரியம் அதிகமாகி 8 இலட்சத்து 56 ஆயிரத்து 903 ஹெக்டேர் அளவில் 550 புதர்ப் பகுதிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. ‘வீட்டின் ஜன்னலைத் திறந்தால் அனலுடன் நச்சுவாயுக்கள் கலந்த காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கும். மூடினாலோ, அதிகபட்ச வெப்பத்தில் வேர்வையில் நனைய வேண்டும் என்று இரஷ்யர்கள் புலம்புகிறார்கள். காட்டுத் தீ புகையால் மாஸ்கோ நகரக் காற்றில் கார்பன் மோனாக்சைடின் அளவும், பிற விஷ வாயுக்களின் அளவும் வழக்கமான அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகக் கலந்துவிட்டதால் பொதுமக்கள் மூச்சுத் திணறி ஆங்காங்கே சுருண்டு விழுந்துக் கொண்டிருந்தனர். இரஷ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வெப்பமும் அதிகரித்துள்ளது. இரஷ்ய காட்டுத் தீயால் சர்வதேச அளவிலும் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2003இல் ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளைக் காட்டிலும் அதிக உயிரிழப்பை தற்போதைய காட்டுத் தீ ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பு அஞ்சுகிறது.

எனினும் தற்சமயம் இரஷ்யா முழுவதிலும் இந்தத் தீ விபத்து மேலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஞ்ஞாயிறன்று வடமேற்கு இரஷ்யாவில் நான்கு மாநிலங்களில் அடித்த புயலால் சுமார் 96 ஆயிரம் பேருக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தீயணைப்புப் படையினர் 24 மணி நேரத்திற்குள் தீ எரியும் பகுதியின் அளவை 45,800 ஹெக்டேர் அளவிலிருந்து எட்டாயிரமாகக் குறைத்துள்ளனர். மேலும், இந்தத் தீ விபத்தில் புகையால் உருவான "பழுப்பு வண்ண மேகக்கூட்டம்", வட துருவ மண்டலத்திற்குச் சென்றால், அங்கு உள்ள பனிக்கட்டி அடுக்குகள் விரைவில் உருகும் நிலை ஏற்படும் என்று சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோதுமை, பார்லி போன்ற தானியப் பயிர்களும் தீயில் கருகுவதால் கோதுமை ஏற்றுமதியை அந்நாட்டு அரசு இஞ்ஞாயிறன்று தடை செய்துள்ளது.

உலகில் தற்போது பொங்கி வெடித்துக் கொண்டிருக்கும் இயற்கையின் வலிமையையும் அதன் மீது நாம் கொள்ள வேண்டிய அக்கறையையும் உணர்வதற்கு இச்சம்பவங்கள் நம்மைத் தூண்டுகின்றன அதேசமயம் இன்று மானுடம் எதிர்கொள்ளும் வெப்பநிலை மாற்றம் வருங்காலத் தலைமுறையையும் தாக்காமல் இருப்பதற்கு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முயற்சிகள் எடுத்து வருவது ஆறுதலைத் தருகின்றது. வருகிற அக்டோபர் 10ம் தேதி இரவு பத்து மணிக்கு பத்து நிமிடங்கள் விளக்குகளை அணைப்பதற்கு எக்ஸ்னோரா அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதாகும் மனிஷ் திவாரி என்ற காவியுடை உடுத்திய சாமியார் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இயற்கை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காகத் தன்னந்தனியாக மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளார். மிதிவண்டி கேரியரில் மரக்கன்றுகளையும் மாற்று உடைகளையும் வைத்திருக்கிறார். இதுவரை ஒரு இலட்சத்துக்கு அதிகமான மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார்.

சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பாற்றவும், அதனை வரம்புமீறிப் பயன்படுத்தாமல் இருக்கவும் மனிதனால் இயலும். மனிதன் காற்றிலும் கடலிலும் கல்லிலும் முள்ளிலும் தூணிலும் துரும்பிலும் ஒளியிலும் உளியிலும் எங்கும் இறைமையைக் காண வேண்டும். மழைத்துளிகளின் ஓசையில், சருகுகளின் சலசலப்பில், பறவைகளின் பாடலில், அலைகளின் ஆர்ப்பரிப்பில், தென்றலின் மெல்லோசையில் இறைமை இழையோடுவதை அவன் அனுபவிக்க வேண்டும். அப்போது அவன் வாடிய பயிருக்காக வாடுவான். வற்றிய ஆறுக்காக வருந்துவான்.

ஒருசமயம் கபீர், தன்வீட்டுப் பசுக்களுக்குத் தீனி இல்லாததால் புல் வெட்டி வரும்படித் தனது மகனை அனுப்பினார். நெடுநேரம் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை. பொழுதும் சாய்ந்து விட்டது. பொறுமையிழந்த கபீர் மகனைத் தேடிப் போனார். அவன் ஒரு புல்வெளியில் நின்று கொண்டு மெல்லிய காற்றில் புற்கள் அழகாக அசைந்தாடுவதைக் கண்டு அதில் இலயித்துப் போய் அவனும் ஒரு புல்லாய் ஆடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த கபீருக்குக் கோபம் வந்தது. உனக்கென்ன பைத்தியமா? நான் என்ன செய்யச் சொல்லி இங்கு அனுப்பினேன்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் இங்கே வந்த போது புற்கள் காற்றில் ஆனந்தமாக ஆடிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடன் அந்த ஆனந்தம் என்னையும் பற்றிக் கொண்டது. இப்பொழுது சொல்லுங்கள் எதற்காக என்னை அனுப்பினீர்கள் என்று? அதிர்ச்சியடைந்த தந்தை கபீர் உன்னைப் புல்வெட்டிவர அனுப்பினேன் என்றார். அதற்கு அவரது மகன், புல்லை வெட்டுவதா அது என்னால் இனி முடியவே முடியாது. நான் இதுவரை ஒரு தனி உலகத்தில் இருந்தேன். அது அற்புதமான உலகம் என்றார். கபீர் பிரமித்தார்.

ஆம். இயற்கையில் இறைமையைக் கண்டு அதனோடு ஐக்கியமாகும் பொழுது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தன்னிலே ஏற்படும்








All the contents on this site are copyrighted ©.