2010-08-16 15:35:23

இந்திய அரசுத் தலைவர் பிரதிபா படில் புனித அல்போன்சாவுக்கு அளித்த புகழஞ்சலி


ஆகஸ்ட் 16, 2010 கேரளாவில் அண்மையில் உருவாகியுள்ள மத அடிப்படைவாத செயல்பாடுகள் நீங்கி, மக்கள் அமைதியில் வாழ வேண்டும் என்று இந்திய அரசுத் தலைவர் பிரதிபா படில் கூறினார்.

சென்ற வாரம், கேரளாவில் புனித அல்போன்சாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரனன்ஞானம் என்ற இடத்தில், அப்புனிதர் பிறந்ததன் நூறாவது ஆண்டு கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்துப் பேசுகையில், அரசுத் தலைவர் இவ்வாறு கூறினார்.

சமாதானமும், சகோதரப் பரிவுமே உலகின் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை செய்தி என்று கூறிய அரசுத் தலைவர் படில், "மக்களிடமிருந்து விலகி, தனித்து வாழும் ஒரு புனிதரும் மக்களுக்குச் சேவைகள் செய்ய முடியும்; அப்படி சேவை செய்பவர்கள் கோடியில் ஒருவரே." என்ற மகாத்மா காந்தியின் கூற்றை மேற்கோள் காட்டி, புனித அல்போன்சாவின் மேன்மையைப் பாராட்டினார்.

புனித அல்போன்சா, தன் வாழ்வில் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும், அவரது குறுகிய வாழ்வு காலத்தில் பிறரது நலனுக்காக வேண்டி வந்தது போற்றுதற்குரிய பண்பு என்றும், சுய நலத்தில் பெரிதும் வளர்ந்து விட்ட நமது சமுதாயத்திற்கு, புனிதரின் வாழ்வு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் அரசுத் தலைவர் பிரதிபா படில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.