2010-08-16 15:47:55

ஆகஸ்ட் 16. நாளும் ஒரு நல்லெண்ணம்.


நெருப்பு என்றால் அழிவு மட்டுமல்ல, ஆக்கமும் தான்.

தீ என்றால் அக்னி மட்டுமல்ல, புனிதமான ஜோதியும் தான்.

அக்னி என்றால் வெப்பம் மட்டுமல்ல, ஒளியும் தான்.

சூரியன் என்றால் பொசுக்குவது மட்டுமல்ல, உயிர்களுக்கு உணவளிப்பதும் தான்.

இல்லையெனில் எரிப்பதைப்போய் வழிபடச் சொல்வார்களா? சூரிய பகவான் என்பார்களா? அக்னி தேவன் என்றுதான் அழைப்பார்களா?

தீபத்திற்கும் தீப்பந்தத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்களின் விளக்க உரைகள் இவை.

பத்தினியை தீ சுடாது என சீதையிடமும், பத்தினி கோபம் பத்தி எரியும் என கண்ணகியிடமும் கண்டோம். கண்டும் என்ன பயன்? அக்னி சாட்சியாய் மணந்தவளை அக்னிக்கே பலியாக்கும் அவல நிலைகள்.

சினம் கொண்டு எரிமலையாய் வெடித்து வார்த்தைகளில் அமிலம் தோய்க்கும் அநியாயங்கள்.

இவை மட்டுமா?

அன்று கடுங்குளிரிலிருந்து தப்பிக்க உதவிய தீ கொண்டு காடுகளைக் காசாக்கி, கரியாக்கி, காற்று மண்டலத்தை கறையாக்கி, ஓசோன் படலத்தை ஓட்டையாக்கி உஷ்ணம், வெப்பம் என கூக்குரலிட வைத்திருக்கிறோம்.

நாம் துவங்கியதை நாம் தானே முடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் காப்பு எனும் புரட்சித்தீ பரவ விடுவோம்.

தீக்குச்சிகளாய் விரல்களை மாற்றுவோம்.

தீப்பந்தங்கள் ஏந்த வேண்டிய தீபங்களுக்காய் இவ்வுலகம் இன்னும் காத்திருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.