2010-08-14 15:56:26

மியான்மாரில் பொதுத் தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெற ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்


ஆக.14,2010. மியான்மாரில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளவேளை, அத்தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் மியான்மார் அரசு அதிகாரிகளை கேட்டுள்ளார்.

மியான்மாரில் வருகிற நவம்பர் 7ம் தேதி பொதுத் தேர்தல்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இவ்வாறு அழைப்புவிடுத்தார் பான் கி மூன்.

மியான்மாரில் எஞ்சியுள்ள எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் நாட்டின் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மியான்மாரின் எதிர்க்கட்சித் தலைவியும் நொபெல் அமைதி விருதைப் பெற்றிருப்பவருமான ஆங் சான் சு கி, கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பான்மையான ஆண்டுகளை வீட்டுக் காவலில் செலவழித்து வருகிறார். கடந்த ஆகஸ்டில், மேலும் 18 மாதங்களுக்கு அவரின் இத்தண்டனை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, மியான்மார் பொதுத்தேர்தல் ஒரு கண்துடைப்பு என்று பலநாடுகளின் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.