தொழுநோயாளர்க்கெதிரான எல்லாப் பாகுபாட்டுச் சட்டங்களும் இரத்து செய்யப்பட ஐ.நா.வல்லுனர்கள்
குழு வேண்டுகோள்
ஆக.14,2010. தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான எல்லாப் பாகுபாட்டுச் சட்டங்களும்
இரத்து செய்யப்படுமாறு ஐ.நா.வின் மனித உரிமை வல்லுனர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுவான
சுகாதாரப் பிரச்சனையாக இருந்துவந்த இந்தத் தொழுநோய் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுவிட்டது,
எனினும் இந்நோயாளிகள் இன்னும் ஒரு வலுவான சமூகத் தழும்பைக் கொண்டு வாழ்கின்றனர் என்று,
18 வல்லுனர்களைக் கொண்ட மனித உரிமைகள் ஆலோசனை குழு கூறியது.
வேலைவாய்ப்பு, நலவாழ்வு
வசதிகள், திருமணம், பொது இடங்களையும் பொதுவான பொருட்களையும் பயன்படுத்துதல் போன்றவற்றில்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளாதவாறு
சட்டங்கள் இயற்றப்படுமாறும் அவ்வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மனித சமுதாயத்திற்குத்
தெரிந்த மிகப் பழமையான நோய்களில் ஒன்றான தொழுநோய்ச் சரியான காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால்
அந்நோயையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் குணமாக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகில்
ஒரு கோடியே ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட தொழுநோயாளிகள் கால் நூற்றாண்டுக்குள் குணமாக்கப்பட்டிருக்கின்றனர்
என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.