2010-08-13 16:03:23

மத்திய பிரதேச ஆயர்கள் மாநில முதலமைச்சரைச் சந்தித்தனர்


ஆக.13,2010: மத்திய பிரதேச மாநிலத்தின் கல்வி மற்றும் நலப்பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளில் தங்களது ஒத்துழைப்புக்கு உறுதி வழங்கியுள்ளனர் அம்மாநிலத்தின் ஒன்பது கத்தோலிக்க ஆயர்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஒன்பது மறைமாவட்டங்களின் ஆயர்கள் நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக இவ்வியாழனன்று அம்மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் ஷவ்கானை சந்தித்து தங்களது ஒத்துழைப்பைத் தெரிவித்தனர்.

கத்தோலிக்கத் திருச்சபை அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், திருச்சபையின் சமூகநலப் பணிகள் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை என்ற தவறான கருத்தை அகற்ற முடியும் என்று போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.

மேலும், ஆயர்கள் முன்வைத்த இந்த ஒத்துழைப்புப் பரிந்துரையைத் தான் கவனத்தில் கொள்வதாகவும், இந்துத் தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதாகவும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷவ்கான் உறுதியளித்தார் என்று தலத்திருச்சபை பேச்சாளர் அருள்திரு ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் சுமார் ஆறு கோடி மக்களுள் 91 விழுக்காட்டினர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே







All the contents on this site are copyrighted ©.