2010-08-13 16:02:22

ஆகஸ்ட் 29 இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சியர் தினம்


ஆக.13,2010: இந்தியாவில் இயேசு கிறிஸ்துவுக்காகவும் நற்செய்திக்காகவும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக இம்மாதத்தின் கடைசி ஞாயிறாகிய 29ம் தேதி “இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சியர் தினத்தை” இந்திய கிறிஸ்தவ சபைகள் கடைபிடிக்கவிருக்கின்றன.

இத்தகைய தினத்தை அனுசரிக்க வேண்டுமென்று மத்திய பிரதேச மாநிலத்தின் ஜான்சியில் மணடலக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்குழுக்களின் செயலர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நடத்திய கூட்டத்தில் பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் இந்தத் தேசிய தினத்தைக் கிறிஸ்தவ சபைகளும் வரவேற்றுள்ளன என்று தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழு செயலர் அருள்திரு புஷ்பா அன்பு கூறினார்.

இயேசு கிறிஸ்துவுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கிய ஜலந்தர் ஆயர் Anil Couto, அன்பு மிக உயரிய முறையில் வெளிப்படுத்தப்படும் செயலாக மறைசாட்சியம் இருக்கின்றது என்றுரைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் “இசை மகாசங்” என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக “இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சியர் தினத்தை” அனுசரித்து வருகிறது.

இவ்வாண்டு நாடெங்கிலுமுள்ள கிறிஸ்தவ சபைகள் இத்தினத்தை அனுசரிக்கின்றன.

ஆயர் Anil Couto, CCBI என்ற இந்திய இலத்தீன் திருவழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுத் தலைவராவார்







All the contents on this site are copyrighted ©.