2010-08-13 16:57:21

ஆகஸ்ட் 14. நாளும் ஒரு நல்லெண்ணம்


மலையில் பிறந்து, பனியாயும் உறைந்து, நதியில் ஓடி கடலில் சங்கமித்து, வெப்பத்தின் விருந்தாளியாகி, வானில் மேகமாய் மிதந்து, மீண்டும் பிறந்த வீட்டுக்கே விருந்துக்கு வரும் தண்ணீரைத் திரவம் என்பதா, ஆவி என்பதா அல்லது திடப்பொருள் என்பதா?

வாய்க்கால், குளம், குட்டை, நதி, கடல் என்று தண்ணீருக்கத்தான் எத்தனை முகங்கள்!

நீரின்றி அமையாது இவ்வுலகு!...நீரின்றி நீயுமில்லை நானுமில்லை நானிலமுமில்லை.

மழை, ஆறு, கடல், குளம், கிணறு என இவ்வளவு இருந்தும் பாக்கெட் தண்ணீரில் பணத்தை இழப்பது ஏன்? குடிநீரை ஏன் சேமிக்கத் தவறினோம்?

மண் தரவில்லை, விண் தரவில்லை என கூக்குரலிடுகிறோமே.

மண் சுமந்த மரங்கள் இருந்திருந்தால் விண் சுமக்க மேகங்கள் இல்லாமல் போயிருக்குமா?

வனங்களின் அழிவே, நதிகளின் அழிவாய்ப் போனதை என்று நாம் உணரப் போகிறோம்?

உண்மைகளை மறந்து மன உறுத்தல்களை மறைத்து எத்தனை காலம் வாழ்ந்து விட முடியும்?

நீருக்காய் அடுத்தவரை சார்ந்திருக்கும் நிலைக்கு ஏன் வந்தோம்?

நன்னீரைத் தொலைத்து கண்ணீரில் கரைவதன் காரணம் என்ன?

கடலில் அணுக்கழிவுகளையும் வேதிக்கழிவுகளையும் கொட்டுகிறோம்.

ஏரிகளை ஏரியா ஏரியாவாய் மனைபோட்டு கூவிக்கூவி விற்கிறோம்.

மழைநீர் சேமிக்கச் சொல்லி சட்டம் ஒருபுறம். நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள் உருவாக்கல் மறுபுறம்.

கடலில் கழிவுகளைக் கொட்டிவிட்டு கடற்கரைகளை அழகுப்படுத்தி என்ன பயன்?

ஆலைக் கழிவால் ஆறுகளில் ஜீவனில்லை, நதியில் மீன்களில்லை. நாளை.... நதிகளும் இல்லை! மணல் கொள்ளையர்களால் பாலாறுகள் பாழாறு ஆகின்றன.

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில் வளங்களைப் பறிகொடுத்தல் தொடர்கதையாகிறது. இருளே வழியாகிறது துயரே துணையாகிறது. ஆழம் தெரியாமல் காலை விட்டு அகப்பட்டு முழிக்கிறோம்.

நீர் இனிது; நிலம் இனிது……..மழை இனிது;....... கடல் இனிது; ........

மகாகவி இவையெல்லாம் இனிது என்றாரா அல்லது இவையெல்லாம் இனி ஏது என்றாரா?

"வீணாகும் ஆற்றுநீர் இணைப்பு எனும் நினைப்பெல்லாம் வீண் தானா?

வெறும் கானல்நீர் தானா?' யார் மனசாட்சிக்கான கேள்விகள் இவை?.








All the contents on this site are copyrighted ©.