2010-08-11 16:32:10

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஆகஸ்ட் 11, 2010. ஐரோப்பியக் கண்டத்தின் இக்கோடை கால விடுமுறையை உரோம் நகருக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காஸ்தல் கண்தோல்ஃபோவின் கோடை விடுமுறை இல்லத்தில் செலவிட்டு வரும் நம் பாப்பிறை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று தன் பொது மறைபோதகத்தை அவ்வில்லத்திலிருந்தே அங்கு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கினார். இப்புதனன்று RealAudioMP3 திருச்சபையில் கொண்டாடப்பட்ட அசிசியின் புனித கிளாரா பற்றி பிறிதொரு புதன் மறை போதகத்தில் நோக்குவோம் என்ற பாப்பிறை, இவ்வாரத்தின் மறைசாட்சி புனிதர்கள் குறித்து எடுத்தியம்பினார்.

மறைசாட்சிகளாக உயிரிழந்த இவ்வாரப் புனிதர்கள் லாரன்ஸ், பொன்ஸியானோ, ஹிப்போலிட்டஸ், எடித் ஸ்டெய்ன், மாக்ஸிமில்யானோ மரிய கோல்பே ஆகியோரின் மறைசாட்சிய வாழ்வு என்பது இறைவனின் முழுமையான அன்பின் ஒரு வடிவம் என தன் உரையைத் துவக்கிய பாப்பிறை, மறைசாட்சிய வாழ்வின் அடித்தளமானது கிறிஸ்துவின் உன்னத அன்பின் தியாகப்பலியாம் அவரின் மரணத்தில் உள்ளது என்றார். பலரின் பரிகாரப்பலியாகத் தன்னையேக் கொடையாக வழங்கிய இயேசு, நாம் ஒவ்வொருவரும் நம் சிலுவைகளை ஒவ்வொரு நாளும் சுமந்து அன்பின் பாதையில் அவரைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கிறார்.

தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர் என்றவரும் இயேசுவே. ஆம், விதை மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய பலன் தராது.

மறைச்சாட்சிகளும் இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இவ்வுலகின் மீட்புக்காக இறப்பதற்கு தங்களைச் சுதந்திரமாகக் கையளிக்கின்றனர். விசுவாசம் மற்றும் அன்பின் உன்னத அடையாளம் இது.

மறைசாட்சிய வாழ்வை எதிர்கொள்வதற்கான பலம் எங்கிருந்து கிட்டுகிறது என்ற கேள்வியை முன்வைத்த பாப்பிறை, அது கிறிஸ்துவுடனான மிக நெருங்கிய ஐக்கியத்திலிருந்துக் கிட்டுகிறது என்றார். மறைசாட்சியம் என்பது அளவற்ற இறை அன்பின் பதில்மொழி வழங்கும் உன்னத அன்பு நடவடிக்கை. நாம் ஒவ்வொருவருவரும் மறைசாட்சிய மரணமடைய அழைப்புப் பெறாமல் இருக்கலாம் ஆனால், இயேசுவின் சிலுவையைச் சுமந்து புனிதத்தை நோக்கிய வாழ்வை வாழ அழைப்புப் பெற்றுள்ளோம் என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை.

RealAudioMP3 இயேசுவை இறுதி வரைப் பின்பற்றி தங்கள் வாழ்வையேத் தியாகப்பலியாக வழங்கிய அனைவருக்கும் இன்று நன்றி கூறுவோம். அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டு நமக்கு புனிதத்துவம் மற்றும் பிறரன்பிற்கான தூண்டுதலாய் இருக்கட்டும் என்ற அழைப்பை முன் வைத்த திருத்தந்தை அங்கு கூடியிருந்தோரையும் அவர்களின் குடும்பங்களையும் இம்மறைசாட்சி புனிதர்களின் பரிந்துரைகளுக்கு முன்வைப்பதாகக்கூறி தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.