2010-08-10 15:54:37

விவிலியத் தேடல்:


RealAudioMP3
1968. அமெரிக்காவில் கொலொராடோ (Colorado) என்ற நகரில் ஓர் அரங்கம் விளையாட்டு வீரகளால் நிரம்பி வழிந்தது. அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு பெரியத் திரையில் திரைப்படம் ஒன்று ஆரம்பமானது. கழி கொண்டு உயரம் தாண்டும் Pole Vault என்று அழைக்கப்படும் போட்டியில் இளைஞன் ஒருவன் உலகச் சாதனை செய்ததை அந்தத் திரைப்படம் காட்டியது. திரைப்படம் முடிந்ததும், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று, கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் அடங்கியதும், அரங்கம் மீண்டும் இருளில் மூழ்கியது. இம்முறை மேடையில் ஒரு குறுகிய வட்டத்தில் ஒளி விழுந்தது. மேடையின் ஓர் ஓரத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரன், தன் இரு கைகளில் பெரியதொரு துணி பொம்மை போன்ற ஓர் உருவத்தைச் சுமந்து வந்தான். அந்தப் பொம்மை போன்ற உருவத்தை மேடையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைத்து, சுற்றிலும் தலையணைகளை வைத்து முட்டுக்கொடுத்து, ஒரு புறமாய்ச் சாய்ந்திருந்தத் தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு, மேடையை விட்டு வெளியேறினான்.
ஒரு சில நிமிடங்களுக்கு முன் திரைப்படத்தில் உலகச் சாதனை நிகழ்த்திய Pole Vault உலகச் சாம்பியன் Brian Sternberg என்ற அந்த இளைஞன்தான் இப்போது, கழுத்துக்குக்கீழ் எல்லாச் செயல்களையும் இழந்த உடலுடன், ஒரு துணி பொம்மை போல் அந்த நாற்காலியில் வைக்கப்பட்டார். ஆழ்ந்த அமைதி அரங்கத்தில் நிலவியது. மிகவும் சன்னமானக் குரலில் Brian பேச ஆரம்பித்தார்.
“என்னருமை நண்பர்களே, விளையாட்டு வீரர்களே, ஐந்தாண்டுகளுக்கு முன் வரை உங்களில் ஒருவனாக நான் இருந்தேன். புகழின் உச்சியில் இருந்தேன். இன்று, இதோ இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு நடந்தது உங்கள் யாருக்கும், இந்த உலகில் எந்த மனிதருக்கும் நடக்கக் கூடாதென்று தினமும் நான் இறைவனை வேண்டுகிறேன். சராசரி மனிதன் செய்யக்கூடிய செயல்கள் எதையும் செய்ய முடியாமல் நான் தினமும் அனுபவிக்கும் அவமானத்தை, சித்ரவதையை நீங்கள் யாரும் அனுபவிக்கக் கூடாதென வேண்டுகிறேன். எனக்கு நடந்தது உங்களில் யாருக்கும் நடக்கக் கூடாது என்பதே என் செபம், என் விருப்பம், என் நம்பிக்கை... ஆனால்...” Brian பேசுவதைக் கொஞ்சம் நிறுத்தினார். அரங்கமே ஆழ்ந்த அமைதியில் அவர் சொல்லப்போவதை இன்னும் உன்னிப்பாகக் கேட்டது. “ஆனால், இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்.”
Brian சொன்ன அனைத்து வார்த்தைகளும், முக்கியமாக, அவர் சொன்ன அந்த இறுதி வார்த்தைகள் அனைவர் மனதிலும் அம்புகளாய்ப் பாய்ந்தன. "இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்."

வாஷிங்க்டன் பல்கலை கழகத்தின் மாணவனாய் இருந்த Brian Sternberg, pole vault போட்டியில் ஈடு இணையற்ற வீரனாய் இருந்தான். 1963ம் ஆண்டு மே மாதம், 20 வயது நிரம்பிய Brian, பல்கலை கழக மாணவனாய் இருந்தபோதே, pole vaultல் உலகச் சாதனை படைத்தான். அதே ஆண்டு Moscowவில் நடைபெற இருந்த உலகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, ஜூலை 6ம் தேதி மற்ற வீரர்களுடன் வாஷிங்க்டனை விட்டுக் கிளம்ப இருந்தான் Brian. ஜூலை 3ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கீழே விழுந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், கழுத்துக்குக்கீழ் உடலெல்லாம் உணர்விழந்து, கடந்த 46 ஆண்டுகள் சக்கர நாற்காலியில் வாழ்வைக் கழித்து வருகிறார்.
ஆனால், சக்கர நாற்காலியில் இருந்த படி Brian இன்னும் சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். 20 வயது Brian, pole vault சாம்பியனாக இருந்த போது, மிகுந்த கர்வத்துடன் யாருடனும் சமமாகப் பழகாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தான், தனது சாதனைகள் என்று தன்னையே மையப்படுத்தி வாழ்ந்து வந்த Brian, இந்த விபத்திற்குப் பின் இறைவன் தன் வாழ்வின் மையமானார் என்று கூறி, அவரது அனுபவத்தைக் கேட்கும் பல ஆயிரம் பேர் வாழ்வின் மையத்திற்கு இறைவனைக் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்.
குறைகள் சூழ்ந்த வாழ்வின் மத்தியிலும் “ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறை இல்லை” என்று மனதாரச் சொல்ல முடியும் என்று சென்ற வாரம் சிந்தித்தோம். பல சமயங்களில், வாழ்வில் ஏற்படும் குறைகளே அந்த ஆயனை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்பதற்கு Brian Sternberg வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டு. குறைகளை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதே இன்றைய நமது தேடலின் முக்கிய கருத்து.

நான் குருத்துவ பயிற்சியில் இருந்தபோது, சிறிதாய், பெரிதாய் பல சவால்களை, பிரச்சனைகளைச் சந்தித்தேன். எனது பதினைந்து ஆண்டு பயிற்சி காலத்தில், ஓராண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டின் இறுதியில், ஒரு குரு என்னிடம், அந்த ஆண்டு எப்படி இருந்தது என்று கேட்டார். அப்போது அவரிடம், "இந்த ஆண்டைப் பற்றி ஓர் உருவகத்தில் சொல்ல வேண்டுமென்றால், இப்படிச் சொல்லலாம். சுற்றிலும் என்ன நடக்கிறதென்று அறியாமல், ஏதோ ஒரு மயக்க நிலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒருவரை, யாரோ ஒருவர் பின்புறமாய் வந்து, சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கி எழுப்பிவிட்டால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது இந்த ஆண்டு." என்று சொன்னேன். பின் புறமாய் வந்து, திடீரென என் சட்டை காலரைப் பிடித்து, என்னை உலுக்கி எழுப்பி, வாழ்வில் அதுவரை நான் சர்வ சாதாரணமாக, ஏனோதானோவென்று ஏற்றுக் கொண்ட பல உண்மைகளைப் பார்ப்பதற்கு, இறைவன் எனக்கு உதவி செய்தார்.

ஆம், அன்பர்களே, ஏனோதானோவென்று சென்று கொண்டிருக்கும் ஒருவரது வாழ்வில் திடீரென ஒரு சம்பவம், அதிலும் முக்கியமாக, துன்பமான ஒரு சம்பவம் நிகழும் போது, அவரது வாழ்க்கை விழித்தெழும். கல்லூரியில் ஆசிரியராய் இருந்தபோது, நான் சந்தித்த ஒரு மாணவன் இப்போது என் நினைவுக்கு வருகிறான். எந்தக் கவலையும் இல்லாமல், வாழ்க்கையை விளையாட்டாகக் கருதி வந்தான் அந்த மாணவன். திடீரென ஒரு நாள் காலை அவன் எழுந்த போது, முந்திய இரவு, தூக்கத்தில், மெளனமாக மாரடைப்பால் தந்தை இறந்துவிட்டதை அறிந்தான். அந்த சம்பவம் அவன் வாழ்வை முற்றிலும் மாற்றியது. நல்லதொரு திசையை நோக்கி மாற்றியது. பொறுப்புடன் தன் படிப்பை முடித்தான். வேலையும் கிடைத்து, தன் வாழ்வைத் தொடர்கிறான்.
நம்மில் எத்தனையோ பேர் இதுபோல் வாழ்வில் அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோம். துன்பம் வந்த அந்த வேளையில் நாம் செயல் இழந்து போனாலும், சில மாதங்களுக்குப் பின், அல்லது சில ஆண்டுகளுக்குப் பின், அந்த நிகழ்வைத் திரும்பப் பார்த்து அதனால் ஏற்பட்ட பல நல்ல விளைவுகளை அசைபோடத் தானே செய்கிறோம். வாழ்வின் பல உண்மைகளை நமக்குக் காட்டிய அந்தத் துன்ப நிகழ்வுக்காக நன்றியும் சொல்கிறோமே.

சிறு சிறு துண்டுகளாக ஒன்று சேர்த்து, முழுப் படமாக உருவாக்கப்படும் புதிர்களைப் பார்த்திருக்கிறோம். இல்லையா? அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றையும் தனியே பார்க்கும் போது, எந்த ஓர் அர்த்தமும் இல்லாமல், எந்த ஓர் அமைப்பும் இல்லாமல் கோணல்மாணலாய்த் தெரியும். ஆனால், அவைகளை எல்லாம் சேர்த்து வைக்கும்போதுதான் முழு அர்த்தமும் விளங்கும்.
அதேபோல், வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா அனுபவங்களும், முக்கியமாக, துன்ப அனுபவங்கள் நம்மைத் தாக்கும் அந்தக் கணத்தில் அர்த்தமற்றதாய்த் தெரியும். ஆனால், ஒரு சில மாதங்கள், வருடங்கள் சென்றபின் அதே அனுபவத்தை வித்தியாசமாகப் பார்க்கும் பக்குவம் பெறுகிறோம். அந்த அனுபவம் நம் வாழ்வெனும் படப்புதிரில் வைக்கப்பட்ட ஓர் அவசியமான துண்டு என்பதை உணர்கிறோம்.

வாழ்வில் நாம் விரும்பியது எல்லாம், எல்லா நேரங்களிலும் நமக்குக் கிடைத்து வந்தால், அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். தேவை என்று எதையுமே உணராமல் வளர்ந்தால் எப்படி இருக்கும்?
துன்பம், குறை என்று எதுவும் இளவரசனான தன் மகனை நெருங்கக் கூடாதென்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார் சுத்தோதனா. வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், இன்பங்கள் மட்டுமே நிறைந்திருந்த அரண்மனையில் தன் மகன் வளர்வதில் அவர் மிகவும் கவனமாய் இருந்தார்.
ஆனால், அந்த அரண்மனையிலேயே சிறைபடாமல், இளவரசன் சித்தார்த் குறைகளை, துன்பத்தை வாழ்வில் சந்தித்ததால், அறிவொளி பெற்று கௌதம புத்தரானார். குறைகளே, துன்பங்களே இல்லாமல் அந்த இளவரசன் வாழ்ந்திருந்தால், இந்த உலகம் மாபெரும் ஒரு மகானை இழந்திருக்கும்.
தன் மகன் குறைகளை, துன்பங்களைச் சந்திக்கக் கூடாதென்று ஒரு தந்தையோ, தாயோ விருப்பப்படுவதில் தவறில்லை. ஆனால், அடம் பிடிக்கும் குழந்தையின் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றும் பெற்றோர், பின் ஒரு காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து வருந்துவதைப் பார்க்கிறோம். அடம்பிடித்து கேட்டதை எல்லாம் பெற்றுக் கொண்ட அந்த மகனோ, மகளோ தங்களை அவ்விதம் வளர்த்துவிட்ட பெற்றோரைக் குறை சொல்வதையும் பார்த்திருக்கிறோம். அதற்கு மாறாக, குழந்தை கேட்டவைகளைத் தராமல், குழந்தைக்கு எது நல்லதென உணர்ந்து தரும் பெற்றோர், அந்த நேரத்தில் கொடூரமாய்த் தெரிந்தாலும், பிற்காலத்தில், அந்த மகனோ, மகளோ தன் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பதையும் பார்க்கிறோம்.
எனக்கேதும் குறையில்லை... என்று திருப்பாடல் 23ன் முதல் வரிகளை நாம் சொல்லும்போது, நம் மனதில் உள்ள கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து, நம் மடியில் பரிசுகளைக் கொட்டும் கிறிஸ்மஸ் தாத்தா அல்ல; மாறாக, நமக்குப் புரியாத வண்ணம், நம்மால் உணர முடியாத போதும், நம்மைத் தன் கரங்களில் தாங்கும் அன்பான, கண்டிப்பான பெற்றோராகத் தான் கடவுளை இந்த வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

வாழ்க்கையில் நாம் விரும்பியவைகள் எல்லாம் கிடைக்காமல், உள்ளத்தில் எத்தனையோ வெற்றிடங்கள் இருக்கும். அந்த வெற்றிடங்கள் இருக்கும் வரை நமது கனவுகள், நமது வாழ்க்கை இவை வளர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எல்லாமே நிறைந்திருக்கும் வாழ்வில் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இல்லை. தேவைகளே இல்லாமல் வளர்ந்து வரும், மிதந்து வரும் வாழ்வில் கடவுளும் தேவையில்லாமல் போய்விடக் கூடும்.
 "ஆண்டவர் என் ஆயர், எனக்கேதும் குறையில்லை." என்று சொல்லும்போது, இவைகளை ஒத்த ஆழமான உண்மைகளை உணர முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.