2010-08-09 15:55:47

ஆகஸ்ட் 10 நாளும் ஒரு நல்லெண்ணம்


இலண்டனுக்கு அருகேயுள்ள ஒரு நகரத்தை சேர்ந்த 23 வயது இளைஞன் மார்க் வீல்டன் என்பவர் இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாக வேலை தேடி அலைந்தார். படிப்பும் பட்டமும் இருந்தும் வேலை மட்டும் கிடைக்கவில்லை. அண்மையில் ஒருநாள் இரவு முழுவதும் தீவிரமாகச் சிந்தித்தார். மறுநாள் காலை எழுந்ததும், ஓர் அட்டையில் "தயவு செய்து எனக்கு வேலை கொடுங்கள்' என எழுதி, அதை எடுத்து கொண்டு, இலண்டனில் பரபரப்பான சாலை ஒன்றில் வந்து நின்றார். அந்நேரம், மழை கொட்டத் தொடங்கியது. அட்டையைப் பிடித்தபடி வீல்டன் ஆடாமல் அசையாமல் நின்றார். பாதிநாள் முடிந்து விட்டது. யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆயினும் தனது குறிக்கோளை நிறைவேற்றியே தீருவேன் என்ற மனஉறுதியுடன் நின்று கொண்டிருந்தார். அச்சமயம் மர நிறுவன உரிமையாளர் ஒருவர், வீல்டனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, தன் நிறுவனத்திற்கு அழைத்து சென்று, உடனே வேலை போட்டுக் கொடுத்தார்.

அந்த உரிமையாளர் சொன்னார் - "கனத்த மழையையும் பொருட்படுத்தாமல், தனக்கு வேலை வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன், அந்த நபர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவருடைய மனஉறுதியைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் எந்த நிறுவனமும், நன்கு முன்னேறும் என்று எனக்குத் தோன்றியது. எனவே, உடனே அவருக்கு வேலை கொடுத்து விட்டேன்"என்று.

வள்ளுவரும், எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் என்று சொன்னார்.

ஒருவர் தான் செய்ய எண்ணிய காரியத்தைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதி உடையவராக இருந்தால், அவர் அடைய நினைத்தவற்றை யெல்லாம் நினைத்தவாறே அடைவார்.







All the contents on this site are copyrighted ©.