2010-08-07 15:34:15

பூர்வீக இனத்தவர் எதிர்நோக்கும் சமூக-பொருளாதார அநீதிகள் களையப்படுவதற்கு ஐ.நா.பொதுச்செயலர் அழைப்பு


ஆக.07,2010. உலகில் பூர்வீக இன மக்கள் எதிர்நோக்கும் சமூக-பொருளாதார அநீதிகளைக் களைவதற்கு, சட்டங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் அரசுகள் முயற்சிக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 9ம் தேதி கடைபிடிக்கப்படும் சர்வதேச பூர்வீக இன மக்கள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அந்த இனத்தவர் குறித்து இவ்வாண்டு சனவரியில் வெளிவந்த அறிக்கைகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளில் காச நோயால் தாக்கப்படும் அபாயத்தை இந்தப் பூர்வீக இனத்தவர் மற்றவர்களைவிட 600 மடங்கு அதிகமாய் எதிர்கொள்வதாகவும், மற்றவர்களைவிட இவர்களின் ஆயுட்காலம் இருபது ஆண்டுகள் குறைவாக இருப்பதாகவும் பான் கி மூனின் செய்தி கூறுகிறது.

உலகின் மொழிகளில் அதிகமான மொழிகளைப் பூர்வீக இனத்தவர் பேசுவதாகவும், இவர்கள் மனித சமுதாயத்தின் கலாச்சார வரலாற்றுக்கும், மெய்யியல் மற்றும் கலைக்கும் மாபெரும் சொத்துக்களை வழங்கியுள்ளதாவும் பான் கி மூன் தனது செய்தியில் பாராட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.